டிராவிஸ் ஹெட், ஸ்மித் அபாரம்: 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்து வலுவான நிலையில் ஆஸ்திரேலியா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா விளையாடி வருகின்றன.
லண்டன்,
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து ஆஸ்திரேலிய தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், உஸ்மான் குவாஜா களமிறங்கினர். 10 பந்துகளை சந்தித்த குவாஜா ரன் எதுவும் எடுக்காமல் (0) சிராஜ் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்துவந்த மார்னஸ் லபுஷேனுடன் ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டேவிட் வார்னர் 60 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்த நிலையில் ஷர்துல் தாகூர் பந்து வீச்சில் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து சிறிது நேரத்தில் லபுஷேன் 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முகமது ஷமி பந்து வீச்சில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய வீரர்களின் பந்து வீச்சை இரு வீரர்களும் சிறப்பாக எதிர்கொண்டனர். டிராவிஸ் ஹெட் அதிரடியாக சதம் விளாசினார். ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் விளாசினார். இறுதியில் முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவரில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்துள்ளது.
டிராவிஸ் ஹெட் 156 பந்துகளில் 156 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 227 பந்துகளில் 95 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணியின் முகமது சிராஜ், முகமது ஷமி, ஷர்துல் தாகூர் தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.