ஆசியக் கோப்பை கிரிக்கெட் சூப்பர்4 சுற்று: இலங்கை வெற்றி பெற 176 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்..!
ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.
சார்ஜா,
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றுடன் லீக் சுற்று நிறைவடைந்தது. இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
இந்த நிலையில் சூப்பர்4 சுற்று போட்டிகள் இன்று தொடங்கியது. இந்த முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஹசரத்துல்லா ஷஷாய் 13 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான ரஹ்மதுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் 6 சிக்சர், 4 பவுண்டரி விளாசி 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய இப்ராகிம் சட்ரன் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார். நஜிபுல்லா சட்ரன் 17 ரன்னிலும், கேப்டன் முகமது நபி ஒரு ரன்னிலும் வெளியேறினர். இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது.