"விராட் கோலி எல்லா காலத்திலும் மிகச்சிறந்த வீரர்": சொல்கிறார் சோயப் அக்தர்
கோலி 110 சதங்கள் அடிப்பார் என்று என்னால் பந்தயம் கட்ட முடியும் என்று அக்தர் கூறியுள்ளார்.
லாகூர்,
இந்திய கிரிக்கெட்டின் தலை சிறந்த வீரர்களுள் ஒருவராக வலம் வருபவர் விராட் கோலி. கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கும் விராட் கோலி, கடந்த சில மாதங்களாக சரியாக தனது திறமையை வெளிப்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்.
அவர் கடந்த நவம்பர் 2019 ஆண்டு முதல் இன்று வரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை. மேலும், ஐபிஎல் லில் பெங்களூரு அணிக்காக விளையாடு வரும் அவர், இந்த சீசனிலும் எதிர்பார்த்த அளவுக்கு அவரால் செயல்பட முடியவில்லை.
நடந்து முடிந்த ஐபிஎல் லில் 16 போட்டிகளில் 22.73 சராசரியில் 341 ரன்கள் எடுத்துள்ளார். அதில் இரு அரைசதங்களும் அடங்கும். எனினும், தனது அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்செல்ல அவரால் முடியவில்லை. இதனால், கோலி மீது முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையில், கோலிக்கு ஆதரவாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது,
"விராட் கோலிக்கு மரியாதை கொடுங்கள். நீங்கள் ஏன் அவருக்கு மரியாதை கொடுக்கவில்லை? ஒரு பாகிஸ்தானியராக நான் சொல்கிறேன், அவர் எல்லா காலத்திலும் மிகச் சிறந்த வீரர். அவர் 110 சதங்கள் அடிப்பார் என்று என்னால் பந்தயம் கட்ட முடியும்" என்று ஒரு பேட்டியில் அக்தர் கூறியுள்ளார்.