15 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து
இங்கிலாந்து அணி நியூசிலாந்து மண்ணில் 2008-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக வெற்றி கண்டுள்ளது.
மவுன்ட் மாங்கானு,
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலாவது டெஸ்ட் பகல்-இரவு மோதலாக (பிங்க் பந்து டெஸ்ட்) மவுன்ட் மாங்கானுவில் நடந்தது.
இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 325 ரன்னும், நியூசிலாந்து 306 ரன்னும் எடுத்தன. 19 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை அதிரடியாக ஆடிய இங்கிலாந்து 374 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 394 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. கடின இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 3-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 63 ரன்களுடன் தோல்வியின் விளிம்பில் பரிதவித்தது.
இந்த நிலையில் 4-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து 45.3 ஓவர்களில் 126 ரன்னில் முடங்கியது. இதனால் இங்கிலாந்து 267 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
நியூசிலாந்து மண்ணில் 2008-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக வெற்றி கண்டுள்ள இங்கிலாந்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 24-ந்தேதி வெலிங்டனில் தொடங்குகிறது.