2வது டி20 போட்டி: டாஸ்மின் பிரிட்ஸ் அரைசதம்...தென் ஆப்பிரிக்கா 177 ரன்கள் குவிப்பு

இந்தியா தரப்பில் தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

Update: 2024-07-07 15:31 GMT

Image Courtesy: @BCCIWomen

சென்னை,

இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் மோதும் 2-வது டி20 கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லாரா வோல்வார்ட் மற்றும் டாஸ்மின் பிரிட்ஸ் ஆகியோர் களம் இறங்கினர்.

இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் லாரா வோல்வார்ட் 12 பந்தில் 22 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து மரிசான் கேப் களம் இறங்கினார். ஒருபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டாஸ்மின் பிரிட்ஸ் அரைசதம் அடித்த நிலையில் 52 ரன்னிலும், மரிசான் கேப் 20 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து அன்னேக் போஷ் மற்றும் சோலி ட்ரையான் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் சோலி ட்ரையான் 12 ரன்னிலும், அன்னேக் போஷ் 40 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக டாஸ்மின் பிரிட்ஸ் 52 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஆட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்