2வது டி20; நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது.

Update: 2024-02-23 09:55 GMT

Image Courtesy: AFP

ஆக்லாந்து,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் ஸ்மித் 11 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய மிட்செல் மார்ஷ் 26 ரன், மேக்ஸ்வெல் 6 ரன், இங்கிலிஸ் 5 ரன், ஹெட் 17 ரன் எடுத்து அவுட் ஆகினர். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹெட் 45 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 174 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய பெர்குசன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 175 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து ஆடியது.

நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய பின் ஆலென் 6 ரன், வில் யங் 5 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய சாண்ட்னெர் 7 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து பிலிப்ஸ் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன.

இதில் சாம்ப்மென் 2 ரன், கிளார்க்சென் 10 ரன், மில்னே 0 ரன், பவுல்ட் 16 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். மறுபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பிலிப்ஸ் 42 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் நியூசிலாந்து 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 102 ரன் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் ஆஸ்திரேலியா 72 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி வரும் 25ம் தேதி நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்