இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய மகளிர் அணி
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி இன்று விளையாடுகிறது.
கேன்டர்பரி,
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் 2-வது ஆட்டத்தில் இரு அணிகளும் கேன்டர்பரி நகரில் இன்று மோதுகின்றன. முதல் ஒருநாள் போட்டியில் ஹர்மான்பீரித் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி அனைத்து துறைகளிலும் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தியிருந்தது. பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா, ஹர்மான்பிரீத் கவுர், யாஷ்டிகா பாட்டியா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டிருந்தனர்.
பந்து வீச்சில் 39 வயதான ஜூலன் கோஸ்வாமி முதல் ஆட்டத்தில் 10 ஓவர்களை வீசி 2 மெய்டன்களுடன் 20 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தார். அவர், இந்தத் தொடருடன் ஓய்வு பெறுவதால் மீண்டும் ஒரு முறை சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்துவதில் முனைப்பு காட்டுவார்.
இன்றைய ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றினால் அடுத்து நடைபெற உள்ள போட்டிகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுக்கும்.