இங்கிலாந்து- நியூசிலாந்து இடையிலான2-வது ஒருநாள் கிரிக்கெட் இன்று தொடக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டிவான் கான்வே, டேரில் மிட்செல் சதத்தால் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

Update: 2023-09-09 21:47 GMT

கார்டிப்,

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டிவான் கான்வே, டேரில் மிட்செல் சதத்தால் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

முதலாவது ஒருநாள் கிரிக்கெட்

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கார்டிப்பில் நேற்று முன்தினம் பகல்-இரவு ஆட்டமாக நடந்தது.

'டாஸ்' ஜெயித்த நியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்தது. டேவிட் மலான் (54 ரன்கள்), பென் ஸ்டோக்ஸ் (52 ரன்கள்), கேப்டன் ஜோஸ் பட்லர் (72 ரன்கள்), லியாம் லிவிங்ஸ்டன் (52 ரன்கள்) ஆகியோர் அரைசதம் அடித்தனர். நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டும், டிம் சவுதி 2 விக்கெட்டும், லோக்கி பெர்குசன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் வில் யங் 29 ரன்னிலும், அடுத்து வந்த ஹென்றி நிகோல்ஸ் 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதைத்தொடர்ந்து டேரில் மிட்செல், தொடக்க ஆட்டக்காரர் டிவான் கான்வேயுடன் இணைந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி சதம் அடித்ததுடன் அணி வெற்றி இலக்கை கடக்க வைத்தனர்.

நியூசிலாந்து வெற்றி

45.4 ஓவர்களில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 4-வது சதம் அடித்த டிவான் கான்வே 111 ரன்னும்(121 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்), டேரில் மிட்செல் 118 ரன்னும் (91 பந்து, 7 பவுண்டரி, 7 சிக்சர்) எடுத்து 3-வது விக்கெட்டுக்கு 180 ரன்கள் திரட்டி ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் டேவிட் வில்லி, அடில் ரஷித் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி சவுதம்டானில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் கருத்து தெரிவிக்கையில், 'இந்த தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது. ஒரு கட்டத்தில் நாங்கள் நல்ல நிலையில் இருந்தோம். எங்கள் பேட்ஸ்மேன்களில் பலர் பந்தை சரியாக கணித்து ஆடாமல் விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் முடிவில் நாங்கள் போதுமான ஸ்கோரை எடுத்தாக நினைத்தோம். கான்வே-மிட்செல் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அந்த கூட்டணியை உடைக்க எங்களுக்கு வழிதெரியவில்லை. அதற்காக நாங்கள் பலவழிகளில் முயற்சித்தோம். சற்று நேரம் அவர்களது ரன்-ரேட்டை கட்டுப்படுத்தி நெருக்கடி கொடுத்தோம். ஆனால் டேரில் மிட்செல் அதிரடியாக பெரிய ஷாட்கள் ஆடி ஆட்டத்தை எங்களிடம் இருந்து பறித்தார். வரும் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு சரிவில் இருந்து மீண்டு வர முயற்சிப்போம்' என்றார்.

 

 

Tags:    

மேலும் செய்திகள்