பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு 3 ஆண்டு தடை
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
லாகூர்,
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல், இந்த ஆண்டு நடந்த பாகிஸ் தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) தொட ரின் போது சூதாட்டத்தரகர்கள் தன்னை அணுகியதை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவிக்காமல் மறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீது இரண்டு பிரிவுகளில் ஊழல் தடுப்பு பிரிவு குற்றச்சாட்டை பதிவு செய்தது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் தன் மீதான புகாரை எதிர்த்து அப்பீல் செய்யாத அவர் என்ன நடவடிக்கை எடுத்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு தள்ளப்பட்டார்.
இந்த நிலையில் உமர் அக்மலுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட 3 ஆண்டு காலம் தடை விதித்து ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் பைசல் இ மிரான் சவுகான் நேற்று உத்தரவிட்டார். 29 வயதான உமர் அக்மல் பாகிஸ்தான் அணிக்காக 121 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 2 சதம் உள்பட 3194 ரன்கள் சேர்த்துள்ளார். 16 டெஸ்ட், 84 இருபது ஓவர் போட்டிகளிலும் ஆடியிருக்கிறார்.