ரஞ்சி கோப்பை: இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி மும்பை அணி

மும்பைக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்சில் ஒடிசா பாலோ ஆன் ஆனது.

Update: 2024-11-08 20:07 GMT

மும்பை,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் எலைட் பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

நடப்பு சாம்பியன் மும்பை -ஒடிசா (ஏ பிரிவு) இடையிலான ஆட்டம் மும்பையில் நடக்கிறது. இதில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 602 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 233 ரன்னும், சித்தேஷ் லாத் 169 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஒடிசா அணி முந்தைய நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய ஒடிசா 94.3 ஓவர்களில் 285 ரன்னில் ஆல்-அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது. அதிகபட்சமாக சந்தீப் பட்நாயக் 102 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் அதிகபட்சமாக ஷம்ஸ் முலானி 6 விக்கெட்டுகள் அள்ளினார்.

பாலோ ஆன் ஆன நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய ஒடிசா அணி 3-வது நாள் ஆட்ட நேரம் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் அடித்துள்ளது. ஒடிசா இன்னும் 191 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், கைவசம் இன்னும் 5 விக்கெட்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளதால் இந்த போட்டியில் மும்பை இன்னிங்ஸ் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

இத்தகைய சூழலில் இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்