ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி இன்னிங்ஸ் வெற்றி

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பரோடாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி இன்னிங்ஸ் மற்றும் 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Update: 2020-02-07 00:20 GMT
வதோதரா,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் வதோதராவில் நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு-பரோடா அணிகள் மோதின. பரோடா அணி முதல் இன்னிங்சில் 174 ரன்னில் சுருண்டது. இதனை அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணி 7 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அபினவ் முகுந்த் இரட்டை சதம் (206 ரன்கள்) அடித்தார். பின்னர் 316 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய பரோடா அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்து இருந்தது.

இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய பரோடா அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. பரோடா அணி 2-வது இன்னிங்சில் 63.3 ஓவர்களில் 259 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் தமிழக அணி இன்னிங்ஸ் மற்றும் 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய குருணல் பாண்ட்யா 74 ரன்னும், அதித் ஷேத் 70 ரன்னும் எடுத்தனர். தமிழக அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கே.விக்னேஷ் 5 விக்கெட்டும், முகமது, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இரட்டை சதம் அடித்த தமிழக வீரர் அபினவ் முகுந்த் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் தமிழக அணி 2 வெற்றி, 2 தோல்வி, 3 டிரா கண்டுள்ளது. இந்த வெற்றியின் மூலம் தமிழக அணி ‘நாக்-அவுட்’ சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.

ராஜ்கோட்டில் நடந்து வரும் மற்றொரு லீக் ஆட்டத்தில் மும்பை அணி, சவுராஷ்டிராவை சந்தித்தது. மும்பை அணி முதல் இன்னிங்சில் 262 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்து இருந்தது. 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய சவுராஷ்டிரா அணி 114.2 ஓவர்களில் 335 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது.

73 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை அதிரடியாக ஆடிய மும்பை அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 53 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்துள்ளது. தனது 14-வது முதல்தர போட்டி சதத்தை நிறைவு செய்த சூர்யகுமார் யாதவ் 134 ரன்கள் (130 பந்து, 17 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். ஷம்ஸ் முலானி 67 ரன்னுடனும், சர்ப்ராஸ் கான் 25 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

மேலும் செய்திகள்