20 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய பார்வையற்ற கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

கடந்த மாதம் பெங்களூருவில் நடந்த பார்வையற்றோருக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Update: 2017-02-28 23:37 GMT
புதுடெல்லி,

கடந்த மாதம் பெங்களூருவில் நடந்த பார்வையற்றோருக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சாதனை படைத்த இந்திய பார்வையற்றோர் அணி வீரர்கள், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பின்னர் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘20 ஓவர் உலககோப்பையை வென்ற இந்திய பார்வையற்றோர் அணிக்கு எனது வாழ்த்துகள். இதே போல் தொடர்ந்து வெற்றிகளை குவித்து இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும். நமது சாம்பியன் கிரிக்கெட் வீரர்களை சந்தித்து உரையாடியது மறக்க முடியாது அனுபவம். அவர்களது இந்த பயணத்துக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர், பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்கள் ஆகியோரையும் பாராட்டுகிறேன். பெரும்பாலான வீரர்கள் பள்ளியில் படிக்கும் போது, தங்களது சீனியர்களின் ஆட்டத்தினால் கவர்ந்து இழுக்கப்பட்டு கிரிக்கெட்டை தேர்ந்தெடுத்தவர்கள். இன்று நம் எல்லோருக்கும் உந்து சக்தியாக இருக்கிறார்கள்’ என்று கூறியுள்ளார்.

மேலும் பிரதமர் மோடி, ஒவ்வொரு வீரர்களின் கிரிக்கெட் பயணத்தை பற்றி தனித்தனியாகவும் குறிப்பிட்டுள்ளார். ‘வீரர் ராம்பிர் சிங் ஒரு ஹீரோ. புற்றுநோயால் பார்வையை இழந்தவர். ஆனால் அவரது தன்னம்பிக்கை, மனஉறுதி தொடர்ந்து உயர பறக்கிறது. 2016–ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியவர்’ என்று கூறியுள்ளார்.

‘சுனில் தனது 4–வது வயதில் ஒரு விபத்தில் பார்வையை பறிகொடுத்தவர். ஆனால் தொடர்ந்து கிரிக்கெட் ஆடுகிறார். தனது சிறப்பான ஆட்டத்தால் பல முறை விருதுகள் வாங்கியுள்ளார்’ என்று இந்த வீரரை பற்றி பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

‘அஜய்குமார் ரெட்டி தனது பள்ளி பருவத்தில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டவர். 50–க்கும் மேற்பட்ட ஆட்டநாயகன் மற்றும் சில தொடர் நாயகன் விருதுகளை வென்ற திறமைசாலி’ என்று பிரதமர் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

இந்த சந்திப்பின் போது வீரர்கள் தங்களது ஆட்டோகிராப்புடன் கூடிய ஒரு பேட், ஒரு பந்து மற்றும் அணியின் ஒரு சீருடையை நினைவுப் பரிசாக பிரதமர் மோடிக்கு வழங்கினர். பிரதமரும், தனது கையெழுத்திட்ட ஒரு பேட், பந்தை அவர்களுக்கு பரிசாக அளித்தார்.

மேலும் செய்திகள்