20 ஓவர் உலக கோப்பை: பாகிஸ்தானை பதம் பார்க்குமா வங்காளதேசம்?

இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

Update: 2022-11-05 23:31 GMT

image courtesy: Bangladesh Cricket twitter

அடிலெய்டு,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அடிலெய்டில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் 2 ஆட்டங்களில் முறையே இந்தியா, ஜிம்பாப்வே அணிகளிடம் தோல்வி கண்டது. அடுத்த 2 ஆட்டங்களில் நெதர்லாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகளை சாய்த்து 4 புள்ளிகளுடன் அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. பாகிஸ்தான் அணி இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அத்துடன் இந்தியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளில் ஒன்று தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் தோற்க வேண்டும். அப்படி நிகழ்ந்தால் தான் பாகிஸ்தான் அணிக்கு அரைஇறுதி அதிர்ஷ்டம் அடிக்கும்.

ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேச அணி 2 வெற்றி (நெதர்லாந்து, ஜிம்பாப்வேக்கு எதிராக), 2 தோல்வியுடன் (தென் ஆப்பிரிக்கா, இந்தியாவுக்கு எதிரான ஆட்டம்) 4 புள்ளிகள் பெற்று அரைஇறுதி வாய்ப்பில் லேசாக தொங்குகிறது. இந்த ஆட்டத்தில் வங்காளதேசம், பாகிஸ்தானை வீழ்த்தி மற்ற ஆட்டங்களின் முடிவு அந்த அணிக்கு சாதகமாக அமைந்தால் அரைஇறுதிக்குள் நுழையலாம்.

இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஓவர் போட்டியில் 17 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 15-ல் பாகிஸ்தானும், 2-ல் வங்காளதேசமும் வென்று இருக்கின்றன. 20 ஓவர் உலக கோப்பையில் மோதிய 5 ஆட்டங்களிலும் பாகிஸ்தானே வெற்றி கண்டுள்ளது.

இந்த போட்டி தொடரில் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் சொதப்பி வருவதால் பாகிஸ்தான் அணி தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. அவர்கள் மீண்டும் சோபிக்க தவறினால் பாகிஸ்தான் அணியை வங்காளதேசம் பதம் பார்க்க வாய்ப்பு உருவாகலாம்.

Tags:    

மேலும் செய்திகள்