20 ஓவர் உலக கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தும் முனைப்பில் தென்ஆப்பிரிக்கா

அதிகாலை 5.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் தென்ஆப்பிரிக்கா-நெதர்லாந்து அணிகள் சந்திக்கின்றன.

Update: 2022-11-05 22:54 GMT

அடிலெய்டு,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அடிலெய்டில் இன்று இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் தென்ஆப்பிரிக்கா-நெதர்லாந்து அணிகள் சந்திக்கின்றன.

பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணியின் முதலாவது ஆட்டம் (ஜிம்பாப்வேக்கு எதிரான) மழையால் ரத்தானது. அடுத்த ஆட்டங்களில் வங்காளதேசம், இந்தியாவை அடுத்தடுத்து வீழ்த்தியது. முந்தைய ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் பணிந்தது. 5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கும் தென்ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்தை தோற்கடித்தால் அரைஇறுதியை எட்டும். இல்லையெனில் அந்த அணி நடையை கட்ட நேரிடும்.

ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி முதல் 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. முந்தைய ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை தோற்கடித்தது. 2 புள்ளியுடன் கடைசி இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணியின் அரைஇறுதி வாய்ப்பு முடிந்து போய் விட்டது.

நெதர்லாந்துக்கு எதிராக ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடி இருக்கும் தென்ஆப்பிரிக்க அணி அந்த ஆட்டத்தில் வெற்றியை தனதாக்கியது. பேட்டிங் மற்றும் வேகப்பந்து வீச்சில் பலம் வாய்ந்து விளங்கும் தென்ஆப்பிரிக்க அணிக்கு, நெதர்லாந்து ஈடுகொடுப்பது கடினமானதாகும். இதனால் இந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணியின் கையே ஓங்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்