170 - 175 ரன்கள் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் - தோல்வி குறித்து ருதுராஜ் கருத்து
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
ஐதராபாத்,
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ஷிவம் துபே 45 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 166 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஐதராபாத் அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 166 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் எய்டன் மார்க்ரம் 50 ரன்கள் அடித்தார்.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த பின்னர் சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, உண்மையாக பிட்ச் மெதுவாக இருந்தது. அவர்கள் கடைசி நேரத்தில் சிறப்பாக பந்து வீசி கட்டுக்குள் வைத்திருந்தனர். எங்களை அதிரடியாக விளையாடவில்லை. ஆரம்பத்தில் நன்றாக விளையாடினோம் என்று நினைக்கிறேன்.
ஆனால் அவர்கள் மீண்டும் கம்பேக் கொடுத்தனர். பிட்ச் கருமண்ணால் உருவாக்கப்பட்டிருந்ததால் நாங்கள் அது மெதுவாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் நேரம் செல்ல செல்ல அது நாங்கள் எதிர்பார்த்ததை விட மெதுவாக இருந்தது. ஐதராபாத் பவுண்டரி எல்லைகளை சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.
ஆனால் பவர் பிளே ஓவர்களில் நாங்கள் அதிகமான ரன்கள் கொடுத்தோம். ஒரு கேட்ச்சை தவற விட்டோம். ஒரு ஓவரில் ரன்களை வாரி வழங்கினோம். இருப்பினும் போட்டியை நாங்கள் 19-வது ஓவர் வரை எடுத்துச் சென்றது நல்ல முயற்சி.
அதனால் 170 - 175 ரன்கள் அடித்திருந்தால் எங்களுக்கு நன்றாக அமைந்திருக்கலாம். கடைசி நேரத்தில் கொஞ்சம் பனி இருந்தது. ஆனால் மொயின் அலி 15 - 16வது ஓவரிலும் நன்றாக பந்து வீசினார். எனவே பிட்ச் அதிகமாக மாறியது என்று நான் கருதவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.