16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் என்னென்ன..?
முதலாவது தகுதி சுற்றில் குஜராத்தை புரட்டியெடுத்த சென்னை அணி இறுதிப்போட்டியிலும் அந்த அணியையே பதம் பார்த்துள்ளது.
ஆமதாபாத்,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், நேற்று முன்தினம் இரவு ஆமதாபாத்தில் அரங்கேறிய இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சுடன் மல்லுக்கட்டியது. இதில் முதலில் பேட் செய்த குஜராத் அணி சாய் சுதர்சனின் அபாரமான அரைசதத்துடன் (96 ரன், 8 பவுண்டரி, 6 சிக்சர்) 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது. பின்னர் சென்னை அணியின் பேட்டிங்கில் முதல் ஓவரிலேயே மழை குறுக்கிட்டது. மழை மற்றும் மோசமான அவுட்பீல்டு காரணமாக சுமார் 2½ மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை அணிக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
சிக்கலான இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு டிவான் கான்வே (47 ரன்), ருதுராஜ் கெய்க்வாட் (26 ரன்), ரஹானே (27 ரன்), அம்பத்தி ராயுடு (19 ரன்) அதிரடியான பங்களிப்பை வழங்கி வெற்றிப்பாதையை நோக்கி பயணிக்க வைத்தனர். என்றாலும் கடைசி கட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இறுதி ஓவரில் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்ட நிலையில், மொகித் ஷர்மா வீசிய அந்த ஓவரில் முதல் 4 பந்தில் சென்னை பேட்ஸ்மேன்கள் 3 ரன் மட்டுமே எடுத்தனர். இதனால் கடைசி 2 பந்தில் 10 ரன் தேவையாக இருந்தது. முடிவு என்ன ஆகுமோ? என்று ரசிகர்கள் பதற்றத்தோடு சீட்டின் நுனிக்கே வந்து விட்டனர். கேப்டன் டோனியோ கடைசி இரு பந்துகளை பார்க்காமல் தலையை கீழே குனிந்து கண்களை இறுக மூடிக்கொண்டார்.
கடைசி பந்து ஹீரோ ஜடேஜா
இப்படியொரு திக்...திக்....திக்... நிலைமையில் 5-வது பந்தை எதிர்கொண்ட ரவீந்திர ஜடேஜா பந்தை சிக்சருக்கு தூக்கியடித்து இதயதுடிப்பை மேலும் எகிற வைத்தார். இதன் தொடர்ச்சியாக கடைசி பந்தை லெக்சைடு வாக்கில் சூப்பராக பவுண்டரிக்கு ஓடவிட்டு ஒரு வழியாக தித்திப்பாக முடித்து வைத்தார். சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியோடு சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்ந்தது. ஷிவம் துபே (32 ரன்), ஜடேஜா (6 பந்தில் 15 ரன்) களத்தில் இருந்தனர்.
சென்னை அணி வெற்றி பெற்று விட்டதை சில வினாடிகள் கழித்து உணர்ந்த டோனிக்கு உற்சாகம் பீறிட்டது. மைதானத்தில் ஜடேஜாவை அலாக்காக தூக்கி மகிழ்ச்சியில் சிலிர்த்த டோனியின் கண்களில் ஆனந்த கண்ணீர் எட்டிப்பார்த்தது.
சென்னை அணி ஐ.பி.எல்.-ல் கோப்பையை வெல்வது இது 5-வது முறையாகும். ஏற்கனவே 2010, 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளிலும் மகுடம் சூடியிருக்கிறது. இதன் மூலம் அதிகமுறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற அணியான மும்பை இந்தியன்சின் சாதனையை சமன் செய்தது. பட்டம் வென்ற சென்னை அணிக்கு ரூ.20 கோடியும், 2-வது இடத்தை பிடித்த குஜராத்துக்கு ரூ.12½ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. ஆட்டநாயகன் விருதை சென்னை வீரர் கான்வேவும், தொடர்நாயகன் விருதை குஜராத் வீரர் சுப்மன் கில்லும் (17 ஆட்டத்தில் 890 ரன்) பெற்றனர்.
மேலும் ஓராண்டு விளையாட விரும்பும் டோனி
வெற்றிக்கு பிறகு சென்னை அணி வீரர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
41 வயதான கேப்டன் டோனி: சூழலை பார்க்கும் போது ஓய்வை அறிவிப்பதற்கு இது தான் சிறந்த நேரம். எல்லோருக்கும் நன்றி, ஓய்வு பெறுகிறேன் என்று இப்போது எளிதில் சொல்லி விட முடியும். ஆனால் அடுத்த 9 மாதங்கள் கடினமாக உழைத்து மேலும் ஓராண்டு ஐ.பி.எல். விளையாட முயற்சிப்பது பெரிய சவாலாக இருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் என் மீது காட்டும் அளவு கடந்த அன்புக்கும், அமோக ஆதரவுக்கும் அவர்களுக்கு நான் திருப்தி தரக்கூடிய பரிசு என்பது இன்னும் ஒரு சீசன் அவர்களுக்காக விளையாடுவது தான். அதற்கு உடல் ஒத்துழைக்க வேண்டும்.
உடல்தகுதி எப்படி இருக்கிறது என்பதை பார்த்து அடுத்த 6-7 மாதங்களில் இது குறித்து முடிவு செய்வேன். எனது விளையாட்டு வாழ்க்கையில் கடைசி கட்டத்தில் இருப்பதால் எல்லாமே உணர்வுபூர்வமாக இருக்கிறது. இந்த ஆண்டு முதல் ஆட்டத்தை ஆமதாபாத்தில் விளையாடினோம். நான் மைதானத்தில் நடந்து வந்த போது, ஒட்டுமொத்த மைதானமும் எனது பெயரை இடைவிடாது உச்சரித்த போது, என் கண்கள் குளமாகின. என்னை அமைதிப்படுத்திக் கொள்ள வீரர்களின் பகுதியில் சிறிது நேரம் உட்கார்ந்தேன். இதை நெருக்கடியாக எடுத்துக் கொள்ளாமல், உற்சாகமாக அனுபவிக்க வேண்டும் என்று உணர்ந்தேன். சென்னையிலும் இதே போன்ற உணர்வுபூர்வமான தருணத்தை எதிர்கொண்டேன். மீண்டும் திரும்பி வந்து விளையாடுவது என்பது நன்றாகத் தான் இருக்கும்.
கிரிக்கெட்டில் ஒவ்வொரு கோப்பையும் ஸ்பெஷல் தான். ஐ.பி.எல்.-ல் எது சிறப்பு என்றால் ஒவ்வொரு பரபரப்பான, நெருக்கடியான ஆட்டத்துக்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். இன்று சில தவறுகள் செய்தோம். பவுலிங் மெச்சும்படி இல்லை. ஆனால் பேட்ஸ்மேன்கள் பொறுப்பை எடுத்து கொண்டு போட்டியை வென்று கொடுத்தனர்.
ஜடேஜா சொல்வது என்ன?
கடைசி பந்தில் வெற்றியை தேடித்தந்த ரவீந்திர ஜடேஜா: நான் குஜராத்தை சேர்ந்தவன். எனது 5-வது கோப்பையை உள்ளூர் ரசிகர்கள் முன் வென்றெடுத்ததை அற்புதமாக உணர்கிறேன். அதிக அளவில் ரசிகர்கள் வருகை தந்து சென்னை அணிக்கு ஆதரவு அளித்தது வியப்பூட்டுகிறது. நள்ளிரவில் மழை நிற்கும் வரை காத்திருந்து போட்டியை பார்த்துள்ளனர். ஒரு அணியாக இந்த வெற்றியை எங்கள் அணியில் மிகவும் சிறப்பு வாய்ந்த உறுப்பினர்களில் ஒருவருக்கு சமர்ப்பிக்க விரும்புகிறோம். அவர் வேறுயாருமில்லை, டோனி தான். இந்த வெற்றி அவருக்குரியது.
கடைசி இரு பந்துகளில் எதுவும் நடக்கலாம் என்ற சூழலில் சந்தித்தேன். எனது பலம் மீது நம்பிக்கை வைத்து பந்தை நேர்பகுதியில் விரட்டுவதை எதிர்நோக்கினேன். ஏனெனில் மொகித் ஷர்மா வேகம் குறைந்த பந்துகளை வீசுவார் என்பது தெரியும். அதற்கு ஏற்ப செயல்பட்டேன்.
ஓய்வு பெற்ற ராயுடு
6-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்ற (3 முறை மும்பை, 3 முறை சென்னை அணிக்கு) திருப்தியுடன் ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு: எனக்கு இது அருமையான முடிவு. இதைவிட பெரிதாக நான் எதுவும் கேட்க முடியாது. உண்மையிலேயே சிறப்பு வாய்ந்த இந்த அணியில் விளையாடிய வகையில் நான் அதிர்ஷ்டசாலி. இந்த வெற்றி எனது வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்கும். கிரிக்கெட்டில் கடந்த 30 ஆண்டுகள் நான் உழைத்து இருக்கிறேன். இத்தகைய வெற்றியோடு விடைபெற்றது மகிழ்ச்சி. 6 ஐ.பி.எல். கோப்பையுடன் எனது கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்வது பெருமை அளிக்கிறது. இந்த தருணத்தில் எனது தந்தை, குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இல்லாவிட்டால் நான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது.
பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி: என்ன ஒரு பிரமாதமான ஆட்டம். ஜடேஜா வெற்றிகரமாக ஆட்டத்தை முடித்து தந்தார். கேப்டன் டோனி ஆச்சரியமான ஒரு மனிதர். அணியில் உள்ள வீரர்களின், குறிப்பாக இளம் வீரர்களின் நெருக்கடியை குறைக்கும் திறமை தான் டோனியின் அசுர பலம். அதற்கு முதலாவது தகுதி சுற்றில் உதாரணம் ஒன்றை சொல்லலாம். அந்த ஆட்டத்தில் மாற்று வீரராக பீல்டிங்கிற்கு வந்த சேனாபதி தடுமாறியதை கண்ட டோனி அவரிடம், பதற்றம் வேண்டாம், ரிலாக்சாக இருக்கும்படி அறிவுரை வழங்கினார். அதன் பிறகு சேனாபதி முக்கியமான ஒரு ரன்-அவுட் செய்து வெற்றிக்கு உதவினார். அமைதி, நிதானம், இது தான் நாங்கள் அறிந்த டோனி. அவருக்கும் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்குக்கும் இடையே சிறப்பான நட்புணர்வு உள்ளது. ஒருவரையொருவர் நன்கு புரிந்து வைத்துள்ளனர். அவர்கள் இருவரையும் பெற்றிருப்பது நாங்கள் செய்த அதிர்ஷ்டம் என்று அவர்கள் கூறினர்.
ஹர்திக் பாண்ட்யா பேட்டி
தோல்விக்கு பிறகு குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறுகையில்,'சென்னை அணி எங்களை விட சிறந்த கிரிக்கெட்டை விளையாடியது. எங்களது பேட்டிங் பிரமாதமாக இருந்தது. குறிப்பாக இளம் வீரரான சாய் சுதர்சனை பாராட்டியாக வேண்டும். இந்த லெவலில் இளம் வீரர் ஒருவர் நன்றாக ஆடுவது எளிதானது அல்ல. அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள். இந்த சீசன் முழுவதும் நாங்கள் விளையாடிய விதத்தை நினைத்து உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்.
டோனிக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவரிடம் தோற்றது குறித்து கவலைப்படவில்லை. நல்ல விஷயங்கள் நல்ல மனிதர்களுக்கு தான் நடக்கும். நான் சந்தித்த இனிமையான மனிதர்களில் டோனியும் ஒருவர். கடவுளின் கருணை எனக்கு உண்டு. ஆனால் கடவுள் இன்றைய நாளில் என்னை விட டோனிக்கு கொஞ்சம் அதிக கருணை காட்டி விட்டார் என்று நினைக்கிறேன்' என்றார்.
முத்தாய்ப்பான மூன்று சாதனை
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஏகப்பட்ட சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சீசனில் அதிகபட்சமாக 37 முறை 200 ரன்னுக்கு மேல் குவிப்பு (கடந்த ஆண்டில் 18 முறை), 12 சதங்கள் (கடந்த ஆண்டில் 8 சதம்), 1,124 சிக்சர்கள் (கடந்த சீசனில் 1,062 சிக்சர்) முக்கியமானதாகும்.
அதிக ரன் குவித்தும் தோல்வி
''இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 214 ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவியது. 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் ஒன்றில் தோல்வி அடைந்த ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இது தான்''
முதலாவது தகுதி சுற்று ராசி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக கடந்த 6 சீசனில் முதலாவது தகுதி சுற்றில் வெல்லும் அணியே கோப்பையையும் தட்டிச்சென்றுள்ளது. இந்த ஐ.பி.எல்.-ல் முதலாவது தகுதி சுற்றில் குஜராத்தை புரட்டியெடுத்த சென்னை அணி இறுதிப்போட்டியிலும் அந்த அணியையே பதம் பார்த்துள்ளது.
அதிசய ஒற்றுமை
இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டம் ஆமதாபாத்தில் நடந்தது. அதில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை தோற்கடித்தது. இறுதிப்போட்டியிலும் இவ்விரு அணிகள் அதே மைதானத்தில் சந்தித்தன. இதில் சென்னை அணி அதே போன்று 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பழிதீர்த்தது.