வேதாகமம்: வெற்றியுள்ள வாழ்க்கை வேண்டுமா?
இயேசுவின் வார்த்தையை நம்பி, செயல்படும் பொழுது, நிச்சயமாகவே நம்முடைய முயற்சிகள் அனைத்தும் ஜெயமாக மாறும்.
பிரியமானவர்களே! ஒவ்வொரு மனிதர்களும் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்வதையே விரும்புகின்றார்கள். கல்வி, வியாபாரம், உத்தியோகம், அரசியல், விளையாட்டுப் போட்டிகள்... என எல்லாவற்றிலும் எப்போதும் தங்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
"தோல்வி தான் வெற்றிக்கு படிக்கட்டு" என்று பழமொழிகள் கூறினாலும், வாழ்க்கையின் எந்த பகுதியில் தோல்வி வந்தாலும் அதை நம் மனம் ஏற்பதில்லை. தோல்வியில் துவண்டு சோர்ந்து விடுகிறோம்.
வேதாகமத்தில் உள்ள ஒரு சம்பவத்தை பார்ப்போம்:
இயேசு வாழ்ந்த அந்நாட்களில் அவர் கெனேசரத்து என்னும் கடலருகே நின்று திரளான மக்கள் நடுவே தேவ வசனத்தை பிரசங்கித்துக் கொண்டிருந்தார். தேவ வசனத்தை கேட்கும் படி மக்கள் அவரிடத்திலே நெருங்கி வந்தார்கள்.
அப்பொழுது அவர், அவர்கள் நடுவே உட்கார்ந்து பேசும்படியாக கடற்கரையிலே நின்ற இரண்டு படகுகளைக் கண்டார். மீன் பிடிக்கிறவர்கள் அந்த படகுகளை விட்டிறங்கி வலைகளை அலசிக் கொண்டிருந்தார்கள்.
இயேசு அந்தப் படகுகளில் ஒன்றில் ஏறினார். அந்தப் படகு சீமோன் என்பவருடையது. அந்தப் படகை கடற்கரையிலிருந்து சற்று தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, படகிலே அமர்ந்து மக்களுக்கு போதகம் பண்ணினார்.
இயேசு போதகம் பண்ணி முடித்த பின்பு சீமோனை நோக்கி: 'படகை ஆழத்திலே தள்ளிக்கொண்டு போய் மீன் பிடிக்கும் படி வலைகளைப் போடுங்கள்' என்றார். அதற்கு சீமோன் இயேசுவிடம், "ஐயா! இரவு முழுதும் நாங்கள் வலைகளை வீசி பிரயாசப்பட்டு, முயற்சித்தும் ஒரு மீன் கூட அகப்படவில்லை, ஆனாலும் உம்முடைய வார்த்தையின்படி செய்கிறேன்" என்று கூறிவிட்டு, இயேசு சொன்ன படியே ஆழத்திலே வலைகளை வீசினான்.
அப்பொழுது வலைகள் கிழிந்து போகும் அளவுக்கு மிகுதியான மீன்கள் வலையில் விழுந்தது, திரளான மீன்கள் வலையில் வந்ததால் இந்த படகில் இருந்தவர்களால் வலையை இழுக்க முடியவில்லை, அப்பொழுது மற்றப் படகிலிருந்த நண்பர்கள் வந்து தங்களுக்கு உதவி செய்யும்படிக்குச் சைகையை காட்டினார்கள், அவர்களும் விரைந்து வந்து வலைகளை இழுத்து இரண்டு படகுகளும் நிரம்பி வழியும் அளவுக்கு மீன்களால் நிரப்பினார்கள்.
சீமோன் இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு இயேசுவின் பாதங்களில் விழுந்தான்.
பிரியமானவர்களே, இந்த வேதாகம சம்பவத்தில் இரவு வேளையில் கடலில், காற்று, அலைகளுக்கு மத்தியில் தொடர்ச்சியாக முயன்றும் ஒரு மீன் கூட அகப்படாமல் தோல்வியுடன், உடல் சோர்வு, வேதனையுடன் இருந்த சீமோனுக்கு இயேசு கூறிய வார்த்தை, அதைக் கேட்டவுடன் தோல்வி சூழ்நிலையைப் பார்க்காமல், அந்த வார்த்தையின் படி அவன் செயல்பட்ட பொழுது, இரண்டு படகுகள் நிரம்பி வழியத்தக்க அளவு மீன்கள் கிடைத்தன.
இன்றைக்கு நாமும் நம்முடைய வாழ்க்கையில் பலவித போராட்டங்கள், பிரச்சினைகள், நோய்கள், கடன் பாரங்கள், தொடர் தோல்விகளால்; சஞ்சலத்துடன், கலக்கத்துடன், பயத்துடன், தவிப்புடன், வேதனையுடன் இருக்கிறோமா?
நாமும் சூழ்நிலைகளைப் பார்க்காமல், சூழ்நிலைகளை நமக்கு சாதகமாக மாற்றும், இயேசுவின் வார்த்தையை நம்பி, செயல்படும் பொழுது, நிச்சயமாகவே நம்முடைய முயற்சிகள் அனைத்தும் ஜெயமாக மாறும்.