இலவச ஆம்புலன்சில் சிகிச்சை அளிக்க மறுக்கப்படும் நிலை
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசால் வழங்கப்பட்டுள்ள கால்நடைகளுக்கான 1962 இலவச ஆம்புலன்சு சேவையினர் உரிமையாளர் இல்லாத பாதிப்புக்கு உள்ளாகும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து வருவதால் கால்நடைகள் இறந்து வருகின்றன.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசால் வழங்கப்பட்டுள்ள கால்நடைகளுக்கான 1962 இலவச ஆம்புலன்சு சேவையினர் உரிமையாளர் இல்லாத பாதிப்புக்கு உள்ளாகும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து வருவதால் கால்நடைகள் இறந்து வருகின்றன.
முக்கிய பங்கு
விவசாயிகள், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுவதில் கால்நடைகள் பழங்காலந்தொட்டு முக்கியப் பங்கு வகிக்கின்றன. கால்நடைத்துறைக்கு அரசால் வழங்கப் பட்டுள்ள இலவச ஆம்புலன்சு சேவை பெரிதும் உதவுகின்றன.
இந்த ஆம்புலன்சு மூலம் உரிய காலத்தில் உதவி கிடைப்ப தால் கால்நடைகள் காப்பாற்றப்பட்டு வருகின்றன. 1962 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைத்தால் அந்த அழைப்பு சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு அந்தந்த மாவட்ட பகுதிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக ஆம்புலன்சு அனுப்பி வைக்கப்படும்.
இந்த வாகனத்தில் கால்நடைகள் இருக்கும் இடத்திலேயே அவசர சிகிச்சை வழங்கும் வகையில் தேவையான அனைத்து அத்தியாவசிய கருவிகள், உபகரணங்கள், மருந்துகள் ஆகியவற்றுடன் ஒரு கால்நடை மருத்துவர், உதவியாளர், ஓட்டுனர் ஆகியோர் இருப்பார்கள்.
சர்வ சாதாரணம்
நடக்க இயலாத கால்நடைகளை வாகனத்தில் ஏற்ற ஏதுவாக ஹைட்ராலிக் லிப்ட் பொருத்தப்பட்டு உள்ளது. மின்சார வசதி இல்லாத இடங்களில் சிகிச்சை அளிக்க ஏதுவாக இன்வெர்ட்டரும், ஜெனரேட்டர் மூலம் இயங்கும் விளக்கும் பொருத்தப்பட்டு உள்ளது.
இந்த வாகனம் கால்நடை வளர்ப்போருக்கு பெரும் உதவியாக இருந்து வரும் நிலையில் சாலைகளில் திரியும் கால்நடைகள் பாதிக்கப்படும்போது இந்த ஆம்புலன்சு சேவை பயன் அளிக்காத நிலையே நீடிக்கிறது.
சிகிச்சை
ஆம்புலன்சு சேவையினர் பாதிக்கப்பட்ட கால்நடைகளை யாராவது உரிமை கொண்டாடினால் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும் என்றும் அதனை கொண்டு சென்று தேவையான உதவிகள் செய்ய முடியும் என்றும் தெரிவிக் கின்றனர்.
பராரியாய் திரியும் கால்நடைகளை அடுத்துவரும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு உரிமை கொண்டாட முன்வருவதில்லை. இதனால் ஆம்புலன்சில் வருபவர்கள் இறங்கி அந்த கால்நடைகளை தொட்டுகூட பார்க்காமல் எங்களுக்கு இடப்பட்டுள்ள கட்டளை உரிமையாளர் இல்லாத கால்நடைகளை தொடக்கூடாது என்று கூறிவிட்டு மனிதாபி மானம் இல்லாமல் திரும்பி சென்று வருகின்றனர்.
கோரிக்கை
இவ்வாறு ராமநாதபுரம் மாவட்டத்தில் 1962 ஆம்புலன்சு சேவையினர் பல இடங்களில் இதுபோன்ற காரணங்களை கூறி திரும்பி சென்று வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் சிகிச்சை பெறமுடியாமல் இறந்து வருகின்றன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிமையாளர் இல்லாமல் பாதிப்புக்குள்ளாகும் கால் நடைகளுக்கும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.