சிறுவாபுரி முருகன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

சிறுவாபுரி முருகன் கோவிலில் திருக்கல்யாண வைபவத்தை சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.

Update: 2023-09-04 13:34 GMT

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி அருகே சின்னம்பேடு என்றழைக்கப்படும் சிறுவாபுரியில் புகழ்பெற்ற பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, தொடர்ந்து ஆறு வாரங்கள் வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில், இக்கோவிலுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரூ.1.25 கோடி செலவில் மகா கும்பாபிஷேகமும், அதைத்தொடர்ந்து 48 நாட்கள் மண்டலஅபிஷேக நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.

இக்கோவிலில் சென்னை அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழு சார்பில் வள்ளி மணவாள பெருமானுக்கு திருக்கல்யாண மகோத்சவத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை 11-ம் ஆண்டாக நடத்தினர்.

இதை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு விநாயகர், ஆதிமூலவர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு அபிஷேகமும், 7 மணிக்கு மூலவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெறது.

இதனை தொடர்ந்து ஆனந்தன் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வள்ளி மணவாள பெருமானுக்கு திருக்கல்யாண வைபவத்தை நடத்தி வைத்தனர். திருக்கோவிலுக்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் கோவில் அருகே அமைக்கப்பட்டு இருந்த பந்தலில் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொள்ள சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்