கருணையின் வடிவமே ஆன்மா

உருவத்தை கண்டு அறிந்து கொள்ளாமல், உணர்வுப்பூர்வமாக உணர்வதே ஆத்ம ஞானம். ஒவ்வொரு கணமும் ஜீவனுக்குள் சுய அறிவு ஒளிர்ந்து கொண்டுதான் இருக்கிறது.;

Update:2023-07-21 20:41 IST

பிரம்மதேசம் பகுதியை ஆட்சி செய்த மன்னனுக்கு, 'ஆன்மா என்பது எது?, அதன் தத்துவம் என்ன?' என்பதில் நீண்ட காலமாக சந்தேகம் இருந்தது. பல நூல்கள் படித்தும், பண்டிதர்களிடம் கேட்டும் மன்னனுக்கு திருப்தியான பதில் கிடைக்கவில்லை. எனவே காட்டில் தவம் புரியும் முனிவர்களை சந்தித்து விளக்கம் கேட்க நினைத்தார்.காட்டில் இருந்த ரிஷிகள், முனிவர்கள் அனைவரும் ஒன்று கூடி, தாங்கள் கற்றதையும், ஆராய்ந்ததையும் வைத்து 'ஆத்ம தத்துவம்' பற்றி தங்களின் கருத்துக்களை மன்னருக்கு விளக்கிக் கூறினர். ஆனால் அதிலும் மன்னருக்கு திருப்தி இல்லை. எனவே ஒரு வித வெறுமையுடன் அரண்மனை திரும்பிக் கொண்டிருந்தார்.

வழியில் ஓரிடத்தில் மன்னனின் தேர் நின்றது. தேரின் முன்பாக அவலட்சணமான ஒருவன் அமர்ந்து கொண்டு வழியை மறிந்திருந்தான். அந்த நபரை, தேரோட்டி விலகச் சொல்லியும் அவன் நகரவில்லை. மாறாக, "நான் நீண்ட தூரம் பயணம் செய்து களைத்துள்ளேன். எனவே நீங்கள் மாற்றுப் பாதையில் செல்லுங்கள்" என்றான்.அதைக் கேட்டதும் ஒரு வித வெறுமையுடன் இருந்த மன்னனுக்கு கோபம் அதிகரித்தது. உடனே அவர், "இந்த விகார மனிதனை தூக்கி, அந்தப் பக்கமாக வீசுங்கள்" என்று கத்தினார். அதைக் கேட்ட அந்த அவலட்சண மனிதன், "மன்னா.. கோபம் எதற்கு.. அரசரான தாங்கள், இந்த எளியவனை அப்புறப்படுத்தி விட்டு, இந்த வழியில் செல்வதால் ஆகப்போவது என்ன?" என்றான். அதற்கு மன்னன், "ஒன்றுமில்லை. ஆனாலும் இந்த வழியல்தான் செல்லப்போகிறேன். வழியைவிடு" என்றார். அதற்கு அந்த மனிதன் சிறிய புன்னகையுடன், "எந்த வழியில் சென்றால் ஒரு லாபமும் இல்லையோ, அந்த வழியில் தெரிந்தே செல்வது அறிவீனம் இல்லையா?" என்றான். அந்த அறிவார்ந்த வார்த்தையைக் கேட்டதும் திகைத்துப் போன மன்னன், "நீ என்ன கூறுகிறாய்?" என்றார். அதற்கு அந்த நபர், "கண்ணை மூடிக் கொண்டு செல்பவருக்கு வழியில் எதுவும் புலப்படாது. அப்படியிருக்கையில் ஞானிகளும், ரிஷிகளும் சொல்வது எப்படி புரியும்?, அவர்கள் எப்படி வழிகாட்டுவார்கள்?" என்றான்.

தன் எதிரே நிற்பது சாதாரணமான மனிதன் அல்ல என்பதை உணர்ந்தவர், "ஐயா.. நான் தவறுதலாக ஏதாவது பேசியிருந்தால் என்னை மன்னியுங்கள். தயவு செய்து கூறுங்கள், தாங்கள் யார்?" என்றார். உடனே அந்த நபர், "என் பெயர் அஷ்டவக்ரர்" என்றார். ஆடிப்போனார் மன்னன். கல்விக் கடலான உத்தாலகரின் பேரனும், மகா ஞானியான கஹோளரின் புதல்வருமான அஷ்டவக்ரரா இவர் என்று நினைத்தவர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து அவரை வணங்கினார்.

மன்னனை தழுவிக் கொண்ட அஷ்டவக்ரர், "மன்னா.. உருவத்தை கண்டு அறிந்து கொள்ளாமல், உணர்வுப்பூர்வமாக உணர்வதே ஆத்ம ஞானம். ஒவ்வொரு கணமும் ஜீவனுக்குள் சுய அறிவு ஒளிர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் பலர், கண்களால் காண்பதை, ஆத்மாவுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதில் கவனம் செலுத்துவதால் அதை அறிய முடியவில்லை. மன்னா நீங்கள் காண்பதே உங்களுக்கு அறிவூட்டுகிறது. அந்த அறிவே அனுபவம் மூலமாக ஆத்மாவை, உள் இருக்கும் நித்திய தத்துவத்தை நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. ஆகவே கண்களால் அறிவை பெறுங்கள், அறிவால் அனுபவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள், உணர்வால் ஆன்மாவை அறிந்து கொள்ளுங்கள். கருணையே ஆன்மாவின் வடிவம்தான்" என்றார்.

அஷ்டவக்ரரின் அறிவுரை, மன்னனுக்கு புது வழியை காட்டியது. குழப்பம் நீங்கி ஞானம் பெற்றவராக அரண்மனை திரும்பினார், மன்னர்.

Tags:    

மேலும் செய்திகள்