ராமரை பரிசோதித்த சுக்ரீவன்

ஒருவர் தன்னுடைய தன்னம்பிக்கையை இழக்கும் போதெல்லாம் ‘ப்ரத்யயாய நம’ என்று சொல்லி வந்தால், தன்னம்பிகையும், புத்துணர்ச்சியும் உண்டாகும்.

Update: 2022-08-30 11:30 GMT

பதினான்கு ஆண்டுகள் வனவாசம் வந்த இடத்தில், ராவணனால் சீதை கவர்ந்து செல்லப்பட்டாள். இலங்கை சென்று, சீதையை மீட்டுவர ராமனுக்கு படைபலம் தேவைப்பட்டது. அப்போது அனுமனால் பரிந்துரைக்கப்பட்டவன்தான் சுக்ரீவன். வானர குலத்தைச் சேர்ந்த அவனிடம், ஏராளமான வானர சேனைகள் இருந்தன. மேலும் அவனது சகோதரன் வாலியை வதம் செய்து, கிஷ்கிந்தையின் ஆட்சியையும் சுக்ரீவனிடம் ஒப்படைத்து விட்டால், அவனிடம் மேலும் பல மடங்கு வானர சேனை இருக்கும். அதைக் கொண்டு இலங்கையைக் கைப்பற்றலாம் என்பது அனுமன் கொடுத்த யோசனை.

 

அதன்படி அனுமன், ராமபிரானை அழைத்துக் கொண்டு சுக்ரீவனிடம் சென்றார். ஆனால் ராமபிரானைப் பார்த்தும், `இவரால் வாலியை கொல்ல முடியுமா' என்ற சந்தேகம் சுக்ரீவனுக்கு எழுந்தது. எனவே `வாலியை வீழ்த்தும் அளவுக்கான வலிமை, ராமனுக்கு உள்ளதா' என சோதிக்க நினைத்தான். அதனால் ராமனுக்கு ஒரு பரீட்சை வைத்தான்.

துந்துபி என்ற அரக்கன், முன்னொரு சமயம் வாலியுடன் போர் புரிய வந்தான். உருவத்திலும், உடல் எடையிலும் பெரியவனான அந்த அரக்கனைக் கொன்று, அவனது சடலத்தை தூக்கி வீசினான் வாலி, அந்த உடல் பல மைல்களைக் கடந்து ரிஷ்யமுக மலையில் சென்று விழுந்தது. அந்தச் சடலம் இருக்கும் இடத்துக்கு ராமனை அழைத்துச் சென்றான் சுக்ரீவன். அங்கே துந்துபி அரக்கனின் உடல் இயற்கையால் சிதைந்து, எலும்பு கூடு மட்டும் இருந்தது. அதுவே பல கிலோ எடை கொண்டதாக இருந்தது.

"ராமா.. இது அன்று வாலியால் கொன்று வீசப்பட்ட துந்துபி அரக்கனின் எலும்புக் கூடு. இப்போது நீ இதை எடுத்து வீசு, அது எவ்வளவு தூரம் செல்கிறது என்பதைப் பார்த்து, உன்னுடைய பலத்தை வாலியோடு நான் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்கிறேன்" என்றான், சுக்ரீவன்.

அப்போது லட்சுமணன், "அண்ணா! உங்கள் இடது கால் கட்டை விரலால் நெம்பி விடுங்களேன்" என்றான். ராமனும் அப்படியே தன் இடது கால் கட்டை விரலால் நெம்பி விட்டார். அது வாலி வீசிய தூரத்தை விட பல மடங்கு அதிக தூரத்தில் போய் விழுந்தது.

இப்போதும் சுக்ரீவனுக்கு ராமன் மேல் நம்பிக்கை வரவில்லை. "ராமா.. என்ன இருந்தாலும் நீ எலும்புக் கூட்டைத்தான் தூக்கி வீசி இருக்கிறாய். வாலி இவன் உயிரோடு இருந்த காலத்திலேயே இவனைத் தூக்கி எறிந்தான். எனவே இந்த ஒரு செயலைக் கொண்டு உன்னால் வாலியைக் கொல்ல முடியும் என்று என்னால் நிச்சயிக்க முடியவில்லை. ஆகையால் உனக்கு இன்னொரு பரீட்சை வைக்கிறேன்" என்றபடி அங்கிருந்த அடர்ந்த வனத்திற்குள் அழைத்துச் சென்றான்.

"ராமா! வாலி தன் வில்லில் இருந்து அம்பை செலுத்தினால், அது பெருத்த சால மரத்தையே துளைக்கும். அவ்வாறு உன்னால் அம்பை செலுத்த முடியுமா?" என்று கேட்டான் சுக்ரீவன்.

ராமபிரான் புன்னகைத்தபடி, தன்னுடைய கோதண்டத்தில் அம்பை பூட்டி எய்தார். அது வரிசையாக ஏழு சால மரங்களை துளைத்துக் கொண்டு சென்றது. அதைக் கண்டபின் தான் சுக்ரீவனுக்கு ராமனின் வீரத்தின் மேல் நம்பிக்கை உண்டானது. இவ்வாறு பலவிதமான சாகசங்களைப் புரிந்து தன் பக்தர்களுக்குத் தன் மேல் நம்பிக்கையை உண்டாக்கி அதை வளர்ப்பவராக மகாவிஷ்ணு திகழ்கிறார். அதனால்தான் அவருக்கு 'ப்ரத்யய:' என்ற பெயர் வந்தது. இது விஷ்ணு சகஸ்ர நாமத்தின் 94-வது திருநாமம் ஆகும்.

ஒருவர் தன்னுடைய தன்னம்பிக்கையை இழக்கும் போதெல்லாம் 'ப்ரத்யயாய நம' என்று சொல்லி வந்தால், தன்னம்பிகையும், புத்துணர்ச்சியும் உண்டாகும்.

Tags:    

மேலும் செய்திகள்