வெள்ள அபாயத்தைச் சொல்லும் சங்கு மண்டபம்

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி தாமிரபரணி ஆற்றில் கட்டப்பட்ட சங்கு மண்டபம் இன்றும் வலுவுடன் கம்பீரமாக உள்ளது.;

Update:2023-09-29 17:52 IST

பழங்கால தமிழர்கள் கலை, இலக்கியம், நாகரிகத்தில் தலைசிறந்து விளங்கினர். உலகமே வியக்கும் வகையில் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில், கல்லணை போன்றவை பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் கம்பீரமாக நின்று தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்கிறது. அந்த வகையில் ஆற்றங்கரையில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாயத்தை தானாகவே எச்சரிக்கும் வகையிலும், ஆற்றுக்குள் பல்வேறு இடங்களில் சங்கு மண்டபத்தை கட்டினர். அவற்றில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி தாமிரபரணி ஆற்றில் கட்டப்பட்ட சங்கு மண்டபம் இன்றும் வலுவுடன் கம்பீரமாக உள்ளது.

இதுகுறித்து ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த ராஜப்பா வெங்கடாச்சாரி கூறியதாவது:-

பழங்கால மக்களின் நாகரிகம் ஆற்றங்கரையிலே தான் தொடங்கியது. பொதிகை மலையில் பிறந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளம் கொழிக்கச் செய்யும் தாமிரபரணி நதி, புன்னைக்காயல் கடலில் சங்கமிக்கிறது. தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாயத்தை எச்சரிக்கும் வகையில், ஆழ்வார்திருநகரியில் கட்டப்பட்ட சங்கு கல் மண்டபம், பழங்கால தமிழர்களின் கட்டிட கலைக்கு மற்றொரு சான்றாக விளங்குகிறது.

ஆற்றில் தண்ணீர் வரும் திசையை பார்த்தவாறு 3 பக்கமும் திறந்தவெளியுடனும், தண்ணீரை தடுக்கும் வகையில் எதிர் திசையில் தடுப்புச்சுவர் மேற்கூரையுடனும் கல்மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கும்போது, கல்மண்டபத்தின் 3 புறத்தில் இருந்து வரும் தண்ணீரை தடுப்புச்சுவர் தடுக்கிறது. அப்போது கல்மண்டபத்தில் இருக்கும் காற்றானது தடுப்புசுவரின் மீதுள்ள சங்கு பகுதி வழியாக மேற்கூரையை கடந்து வெளியேறும்போது தானாகவே பேரிரைச்சலுடன் எச்சரிக்கை ஒலியை எழுப்புகிறது. பின்னர் ஆற்றில் வெள்ளம் படிப்படியாக வடியும்போதும், கல்மண்டபத்துக்குள் சங்கு பகுதி வழியாக காற்று செல்லும்போது ஆபத்து நீங்கியதாக ஒலித்து உணர்த்துகிறது.

எவ்வளவு பெரிய வெள்ளம் வந்தாலும் சேதமடையாத அளவு வலுவுடனும், காற்றுப்புகாத வகையில் உறுதியுடனும் கட்டப்பட்ட சங்கு மண்டபமானது ஆழ்வார்திருநகரியின் அடையாளமாகவே மாறி விட்டது. நவதிருப்பதி கோவில்களில் 9-வது தலமாக விளங்கும் ஆதிநாதர் ஆழ்வார் கோவில் படித்துறையும் சங்கு மண்டபத்தின் அருகில் உள்ளது. இங்கு தாமிரபரணி புஷ்கர விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பலநூறு ஆண்டுகளைக் கடந்தும் கல்மண்டபம் பழமைமாறாமல் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை ஒலித்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் கல்மண்டபத்தை வெள்ளம் மூழ்கடிக்கும்போது, பேரிரைச்சலுடன் சங்கு ஒலிக்கும்போது, கரையோர மக்கள் மேடான பகுதிக்கு சென்று விடுவர். பின்னர் கல்மண்டபத்துக்கு கீழாக தண்ணீர் வடியும்போது ஆபத்து நீங்கியதாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்