சென்னை அஷ்டலட்சுமி கோவிலில் ரூ.1½ கோடியில் திருப்பணிகள் தொடங்கின

மகாமண்டபத்தை பழுதுபார்த்து வர்ணம் தீட்டும் பணி மட்டும் ரூ.14.30 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படுகிறது.;

Update:2024-02-16 11:52 IST

சென்னை,

சென்னை பெசன்ட்நகரில் உள்ள அஷ்டலட்சுமி கோவிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் உபயதாரர்கள் நிதியின் மூலம் ரூ.4.60 லட்சத்தில் ஆஞ்சநேயர் சன்னதி, தன்வந்திரி சன்னதி மற்றும் சக்கரத்தாழ்வார் சன்னதிகளும், ரூ.4.70 லட்சத்தில் குருவாயூரப்பன் சன்னதி மற்றும் மடப்பள்ளி பழுதுபார்த்து வர்ணம் தீட்டும் பணிகள், ரூ.33 லட்சத்தில் கோவிலின் அனைத்து மரக்கதவுகளையும் பழுதுபார்த்து புதுப்பித்தல், ரூ.25 லட்சத்தில் கோவிலின் வடக்கு மற்றும் தெற்கு பக்கங்களில் தரைத்தளம் அமைத்தல், ரூ.10.50 லட்சத்தில் பக்தர்களுக்கான வரிசை அமைத்தல், ரூ.11.40 லட்சத்தில் அஷ்டாங்க விமானம் பழுதுபார்த்து வர்ணம் தீட்டுதல், ரூ.14.30 லட்சத்தில் மகாமண்டபம் பழுதுபார்த்து வர்ணம் தீட்டுதல், ரூ.28.19 லட்சத்தில் கோவில் முழுவதும் மின்சார இணைப்புகள் பழுதுபார்த்து புதுப்பித்தல் என 9 பணிகள் ரூ.1.41 கோடி மதிப்பில் நடக்கின்றன.

கும்பாபிஷேகத்துக்கு முன்பாக நடக்கும் இந்த திருப்பணிகளுக்கான பாலாலய நிகழ்ச்சியை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். 

திருவேற்காடு

இதேபோல் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலிலும் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான பாலாலயம் நிகழ்ச்சி கடந்த 11-ந்தேதி தொடங்கியது. மூலவர் அம்மனை பாலாலயம் செய்து அருகிலேயே புதிதாக கட்டப்பட்டுள்ள தற்காலிக தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஏகாம்பரேஸ்வரர் கோவில்

சென்னை பூக்கடை தங்க சாலை தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலிலும் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளது. இதற்காக நேற்று பாலாலயம் நடந்தது. இதற்காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் அத்தி மரத்தில் மூலவர் உள்ளிட்ட தெய்வங்கள் மர சிலைகளாக செய்து பொதுமக்கள் வழிபடுவதற்காக தனியாக பிரதிஷ்டை செய்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக கோவில் கோபுர சிலைகள், மூலவர் சிலை, நந்தீஸ்வரன் சிலை, நடராஜர் சிலை, நவகிரக சிலைகள் துணியால் கட்டி மூடப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்