சிதம்பரம்:
உலக புகழ் பெற்ற சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலில் உலக நன்மை கருதி நடைபெறவுள்ள அதிருத்ர யாகம் மற்றும் மாசி மாத மகாபிஷேகத்தை முன்னிட்டு சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு கோடி அர்ச்சனை முடிவுற்று நேற்று தன பூஜை, கஜ பூஜை ஆகியவை நடைபெற்றது.
இன்று நடைபெறும் அதிருத்ர யாகத்தை முன்னிட்டு ஆயிரங்கால் மண்டபம் அருகே பிரமாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.
மகாபிஷேகத்தை முன்னிட்டு உலக நன்மை கருதி இன்று (பிப்.௨௨) காலை சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு ஏககால லட்சார்ச்சனையும், யாகசாலையில் 2016 கலசம் ஆவாஹனம் செய்யப்பட்டது.
இன்று பிற்பகல் யாகசாலையில் அதிருத்ர மஹாயாகம், லட்ச ஹோமம், அதிருத்ர ஹோமம், வஸோர்த்தாரா ஹோமம், மகாபூர்ணாஹூதி நடைபெறுகிறது.
லட்ச ஹோமம் என்பது ஒரே நேரத்தில் நூற்று எட்டு தீட்சிதர்கள், ஒன்பது யாக குண்டங்கள் வாயிலாக நடேச ஸஹஸ்ரநாமாவளிகளை ஹோமம் செய்வது லட்ச ஹோமம் ஆகும். பின்னர் வடுக பூஜை, கன்யா பூஜை, சுவாசினி பூஜை, தம்பதி பூஜை முடிவுற்று மாலையில் யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்று கோவில் கனகசபையில் எழுந்தருளும் சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு 2016 கலச அபிஷேகத்துடன் மாசி மாத மஹாபிஷேகமும் மாலை 6 மணிக்கு மேல் விமரிசையாக நடைபெறவுள்ளது.