குலதெய்வம் தெரியாதவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்
குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஒருவர் தன்னுடைய இஷ்ட தெய்வத்தையோ, மற்ற பிற தெய்வங்களையோ வணங்கலாம், வணங்காமலும் போகலாம்.;
ஆனால் குலதெய்வத்தை ஆண்டிற்கு ஒரு முறையாவது, அந்த தெய்வம் இருக்கும் இடத்திற்குச் சென்று வழிபட்டு வர வேண்டியது முக்கியமானது. ஆனால் பலருக்கும் தங்களின் குலதெய்வம் தெரியாமல் இருப்பதே துரதிர்ஷ்டம்தான்.
ஒரு சில குடும்பங்கள் ஏதாவது ஒரு காரணத்தினால், சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்குச் சென்று வாழ்க்கையை தேடியிருப்பார்கள். இதனால் சுமார் 2 அல்லது 3 தலைமுறைகளாக குலதெய்வம் கோவிலுக்குச் செல்லாததாலும், அதைப் பற்றி பிள்ளை களுக்குத் தெரியப்படுத்தாத காரணத்தாலும், பிற்கால சந்ததியர் தங்களின் குலதெய்வத்தையே மறந்திருப்பார்கள். அல்லது குலதெய்வம் தெரியாமல் இருப்பார்கள். அவர்கள் ஒரு நல்ல நிலைக்கு வரும்போது, குலதெய்வத்தை வழிபட வேண்டும் என்று நினைத்தால் அது முடியாமல் போய்விடும். இப்படி குலதெய்வம் தெரியாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை ஏராளம்.
அப்படிப்பட்டவர்கள் எப்படியாவது, தங்களின் குலதெய்வத்தை கண்டறிய வேண்டியது அவசியம். என்றாலும், அதுவரை குலதெய்வமாக தமிழ்பெரும் கடவுளான, முருகப்பெருமானை வழிபட்டு வருவது நன்மை அளிக்கும். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். பெரும்பாலான முருகப்பெருமானின் தலங்கள், குன்றின் மீதே அமைந்திருக்கும். ஆனால் கடற்கரையோரம் அமைந்த திருத்தலமாக வேறு பட்டு நிற்பது திருச்செந்தூர் திருத்தலம். சூரபதுமனை வதம் செய்து, வெற்றி வீரனாக வீற்றிருக்கும் செந்திலாண்டவரை, குலதெய்வம் தெரியாதவர்கள், தங்களின் குலதெய்வமாக நினைத்துக் கொண்டு வழிபட்டு வரலாம்.