கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா; கிளி வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக 2-ம் நாள் திருவிழாவையொட்டி கிளி வாகனத்தில் அம்மனின் வீதி உலா நடைபெற்றது.;
கன்னியாகுமரி:
உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 12-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, இன்னிசைக் கச்சேரி, பக்தி சொற்பொழிவு, மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் 2-ம் திருவிழாவான நேற்று மாலை சமய உரையும் அதைத் தொடர்ந்து வயலின் இன்னிசை கச்சேரியும் நடந்தது. அதன்பிறகு அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கிளி வாகனத்தில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது.
கோவிலிலிருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி ,நடுத்தெரு, கீழரத வீதி வழியாக கன்னியம்பலம் மண்டபத்தை சென்றடைந்தது. அந்த மண்டபத்துக்குள் அம்மன் சிறிதுநேரம் இளைப்பாறும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு தீபாராதனை நடந்தது.
பின்னர் அங்கிருந்து வாகன பவனி புறப்பட்டு சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் வாகனத்தில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்"சாத்தி வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.