கண்களைக் கவரும் சமணர் கோவில்

ராஜஸ்தான் மாநிலம் ஆரவல்லி மலைத் தொடரில் அமைந்திருக்கிறது, பாலி மாவட்டம். இங்கு ராணக்பூர் என்ற கிராமத்தில் அழகிய சிற்பங்களுடன் கூடிய சமணத் தீர்த்தங்கரர்களின் ஆலயம் அமைந்திருக்கிறது.

Update: 2023-06-16 15:52 GMT

மேவார் தேசத்து மன்னனான ராண கும்பாவின் உதவியுடன் ராணக்பூரின் சமண வணிகரான தர்னாஷா என்பவர், இந்த ஆலயத்தை கி.பி. 15-ம் நூற்றாண்டில் கட்டியிருக்கிறார். சமண தீர்த்தங்கரர்களில் முதலாவது தீர்த்தங்கரரான ஆதிநாதர் என்னும் ரிஷபநாதர் மற்றும் 7-வது தீர்த்தங்கரரான சுபர்சுவநாதர் ஆகிய இருவருக்கும் அர்ப்பணிக்கப்பட்டதாக இந்தக் கோவில் திகழ்கிறது.

மூன்று கோவில்களின் தொகுப்பாக இது கட்டப்பட்டிருக்கிறது. சமணர்களின் ஐந்து முக்கியமான யாத்திரை தலங்களில் ராணக்பூர் சமணர் கோவிலும் ஒன்று. இந்தக் கோவில் இளம் நிறத்தில் 62 மீட்டர் நீளம், 60 மீட்டர் அகலம் என்ற அளவில் கட்டப்பட்டுள்ளது. கோவின் அழகிய குவிமாடங்கள், விமானங்கள், சிறுகோபுரங்கள் மற்றும் விதானங்கள் ரணக்பூரின் மலைச்சரிவில் அழகாக காட்சியளிக்கிறது. சிற்பங்களுடன் கூடிய இக்கோவிலை 1444 பளிங்குத் தூண்கள் தாங்கி நிற்கின்றன. இந்த தூண்கள் ஒவ்வொன்றிலும் சமணர்களின் பெயர் சொல்லும் பல்வேறு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தூணிலும் உள்ள சிலைகள், மற்றொரு தூணில் உள்ள சிலையைப் பார்க்கும் வகையில் கலைநயத்துடன் செதுக்கியிருக்கிறார்கள்.

இவற்றில் ஒரே கல்லால் செதுக்கப்பட்ட 108 தலைகளுடனும், வால்களுடன் கூடிய பாம்புச் சிற்பம் மிகவும் அழகான ஒன்றாகும். 6 அடி உயரம் கொண்ட கோவில் மூலவரான ஆதிநாதர் மற்றும் சுபர்சுவநாதர் ஆகியேரின் சிலை, வெள்ளை பளிங்கு கற்களால் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில், பார்சுவநாதர் கோவிலுக்கு அருகில் 22-வது தீர்த்தங்கரரான நேமிநாதருக்கும், சூரிய பகவானுக்கும் தனித்தனி சன்னிதிகள் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் கட்டிட அமைப்பு, நான்முக வடிவில் கட்டப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் பண்டைய மிர்பூர் சமணர் கோவிலை அடிப்படையாகக்கொண்டு, இக்கோவில் நிறுவப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

இக்கோவில் வளாகத்தில் 13-ம் நூற்றாண்டிற்கு முன்பு இருந்த சூரியக் கோவில் சிதிலமடைந்து விட்டதாகவும், அதன்பின்னர் மீண்டும் 15-ம் நூற்றாண்டில் அது கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இக்கோவில் அழகிய சிற்பங்களுக்கும், கட்டிடக் கலைக்கும் புகழ் பெற்றது. இந்த ராணக்பூர் ஜெயின் கோவிலானது, ஆனந்த கல்யான் என்ற அறக்கட்டளையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலயம் உதய்பூரில் இருந்து 95 கிலோமீட்டர் தொலைவிலும், ஜெய்ப்பூரில் இருந்து 370 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்