தண்ணீருக்கு செய்ய வேண்டிய கடமைகள்

விவசாயம் செழுமைப் பெறுவதற்காக மழை மூலம் நீரைப் பூமிக்கு இறக்கி வைப்பதாக திருக்குர் ஆன் கூறுகிறது. மழை நீரைச் சேமிப்பது குறித்தும் திருக்குர்ஆன் அழகாக விளக்கியுள்ளது.

Update: 2022-06-14 13:41 GMT

விவசாயம் மனித வாழ்வில் மூச்சுக் காற்றாகும். நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத்தை பேணிப் பாதுகாத்தல் அவசியமாகும்.

உலகில் ஏற்படும் அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வாக, பல தருணங்களில் தன்னை நிலைநிறுத்தும் இஸ்லாம். விவசாயம், நீர் மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்தும் பல இடங்களில் பதிவுசெய்கிறது.

விவசாயம் செழுமைப் பெறுவதற்காக மழை மூலம் நீரைப் பூமிக்கு இறக்கி வைப்பதாக திருக்குர் ஆன் கூறுகிறது.

வானத்திலிருந்து "அருள் வளமிக்க" தண்ணீரை (மழையை) நாம் இறக்கி வைத்து, அதைக் கொண்டு தோட்டங்களையும், அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைப்பிக்கிறோம். (திருக்குர்ஆன் 50 : 9).

கடல் நீர் ஆவியாகி பிறகு மழையாய் மறுபடியும் பூமிக்கு வருகிறது. இது இயற்கையின் அழகிய அமைப்பு. நாம் மழைநீரைச் சரியான முறையில் சேமித்து நமது வாழ்வாதாரத்திற்குப் பயனாக அமைத்துக்கொள்வது மனித சமூகத்தின் முதல் கட்டப் பணியாகும்.

மழை நீரைச் சேமிப்பது குறித்தும் திருக்குர்ஆன் அழகாக விளக்கியுள்ளது.

காற்றைச் சூல் கொண்டதாக நாமே அனுப்புகிறோம். பின்னர், வானிலிருந்து நீர் பொழிவித்து, அதனை உங்களுக்கும் புகட்டுகிறோம். நீங்கள் அதனைச் சேமித்துவைப்போராய் இல்லை. (திருக்குர்ஆன் 15:22)

நம் வருங்கால தலைமுறைகளின் வாழ்க்கை சீராக அமைவதற்கும், தண்ணீர் பற்றாக்குறை என்ற வார்த்தை உயிரற்று போவதற்கும் மழை நீர் சேமிப்பு நம் அன்றாட செயல்பாடுகளின் பட்டியலில் ஒன்றாக அமைதல் வேண்டும்.

மழை அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. அதன் மூலம் பெறப்படும் தண்ணீரும் பொதுவானது‌. தனக்குக் கிடைத்த நீரை தன் தேவைகளுக்குப் போக மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பது மனித சமூகத்தின் கடமையாகும். மற்றவர்களுக்குப் பகிராமல் தன்னகத்தே வைத்துக் கொள்வது மிகப்பெரிய அநியாயமாகும். இவ்வாறு செய்வதை நபியவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

(தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்கலாகாது. (அவ்வாறு) தடுத்தால், (அதைச் சுற்றியுள்ள) புல் பூண்டுகளை (மேய விடாமல் கால்நடைகளைத்) தடுத்ததாகி விடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:புகாரி)

மூன்று பேரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மேலும், அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு. அவர்களில் ஒருவன், (மக்களின் பயணப்) பாதையில், தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பெற்றிருந்தும் வழிப்போக்கர்கள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுத்துவிட்டவன். (நூல்: புகாரி)

கைப்பிடியளவு தண்ணீர் கிடைத்தாலும் அதனை வீண் விரயம் செய்வதாகாது. தண்ணீரை அசுத்தம் செய்வதை நபிமொழிகள் தடை செய்கின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் உறங்கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும், பானத்தையும் மூடிவையுங்கள்'' என்று சொன்னார்கள். அதன் மீது ஒரு குச்சியைக் குறுக்காக வைத்தாவது (மூடிவையுங்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நான் எண்ணுகிறேன். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி)

வாழ்வாதாரத்தின் மையவோட்டமாக திகழும் விவசாயம் செழிக்க நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டிய கடமையை இஸ்லாம் நம் மீது விதிக்கிறது.. நிலத்தடி நீரைப் பாதுகாத்து வருங்கால தலைமுறைகளிடம் ஒப்படைப்பது தண்ணீருக்கு நாம் செய்யும் கடமையாகும்.

Tags:    

மேலும் செய்திகள்