இந்தியாவின் தசரா திருவிழாக்கள்
நவராத்திரி விழா துர்க்கை தேவிக்கு முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டாலும், தென்னிந்தியாவில் சரஸ்வதி, சாமுண்டி உள்ளிட்ட சில தெய்வங்களை இணைத்து கொண்டாடப்படுவது சிறப்புக்குரியது.
இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் நவராத்திரி மிகவும் சிறப்புக்குரியது. ஒன்பது இரவுகள் அம்பாளை வழிபடுவதனை 'நவராத்திரி' என்கிறோம். தீமையை அகற்றி நன்மையை பரவச் செய்வதை கருப்பொருளாகக் கொண்டு, இந்தியா முழுவதும் இந்த விழா கொண்டாடப்பட்டாலும், உள்ளூர் பழக்க வழக்கம் மற்றும் மரபுகளின்படி, மாநிலங்களுக்கு மாநிலம் இந்த விழா மாறுபடுகிறது. வட மாநிலங்களில் நவராத்திரி விழா துர்க்கை தேவிக்கு முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டாலும், தென்னிந்தியாவில் சரஸ்வதி, சாமுண்டி உள்ளிட்ட சில தெய்வங்களை இணைத்து கொண்டாடப்படுவது சிறப்புக்குரியது. நவராத்திரியை வெவ்வேறு விதமாக கொண்டாடும் இந்தியாவின் சில மாநிலங்கள் பற்றி இங்கே...
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் துர்க்கை மட்டுமின்றி, சரஸ்வதி, லட்சுமி ஆகிய முப்பெரும் தேவியரின் வழிபாடு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. முதல் மூன்று நாட்கள் துர்க்கை, அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி, கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி என்று மூவருக்கும் சமமான வழிபாட்டு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. நவராத்திரியின் 10 நாட்களிலும் வீடு மற்றும் கோவில்கள், பொது இடங்களில் 'கொலு' அமைப்பது என்பது விசேஷமானது. நவராத்திரியின் ஒன்பதாம் நாளில், சரஸ்வதி பூஜை கொண்டாடுகிறார்கள். அதில் மாணவர்கள் தங்கள் கல்வி சார்ந்த பொருட்களையும், கலைஞர்கள் தங்களின் கலை சார்ந்த பொருட்களையும், ஒவ்வொரு உழைப்பாளர்களும், தங்கள் உழைப்பை முன்னிறுத்தும் பொருட்களையும், சரஸ்வதியின் உருவத்திற்கு முன்பாக வைத்து வணங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 10-ம் நாளில் மகிஷனை வதம் செய்த துர்க்கையின் வெற்றி தினமாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் இந்த விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்படும். மைசூர் தசராவிற்கு அடுத்தபடியாக உலகப்புகழ்பெற்ற திருவிழாவாக இந்த தசரா திருவிழா உள்ளது.
குஜராத்
நவராத்திரி விழாவானது, குஜராத் மாநிலத்தில் ஒரு தனித்துவமான முறையில் கொண்டாடப்படுகிறது. குஜராத் மக்கள், நவராத்திரியின் ஒன்பது நாட்களும், துர்க்கை மற்றும் துர்க்கையின் வெவ்வேறு ஒன்பது அவதாரங்களையும் போற்றும் வகையில் ஒன்பது நாட்கள் விரதம் மேற்கொள்கிறார்கள். நவராத்திரி நாளில் குஜராத் மக்கள் ஆடும், ஒரு வகை நடனம் பிரசித்தி பெற்றதாகும். இந்த நடனத்திற்கு 'கர்பா நடனம்' என்று பெயர். நவராத்திரியின் ஒவ்வொரு நாள் மாலை வேளையிலும் நோன்பு இருக்கும் பெண்கள், பானைக்குள் ஏற்றி வைக்கப்பட்ட மெழுகுவர்த்தி முன்பாக நின்று தங்கள் பிரார்த்தனைகளை, வேண்டுதல்களைச் சொல்லி வழிபடுவார்கள். 'கார்போ' என்று அழைக்கப்படும் இந்த பானை, வாழ்க்கையின் மூலத்தையும் ஒளி சக்தியையும் குறிக்கும். 'கார்போ' என்பதே மருவி 'கர்பா' என்றானதாக சொல்கிறார்கள். 'கர்பா' என்ற வார்த்தைக்கு 'கருப்பை' என்றும் பொருள். பானைக்குள் உள்ள மெழுகுவர்த்தியும், அதன் ஒளியும், கருப்பையில் இருக்கும் உயிரைக் குறிக்கிறது. நவராத்திரியின் ஒவ்வொரு நாள் மாலையிலும் ஆண்களும், பெண்களும், துர்க்கா தேவி சிலையைச் சுற்றி ஆடும் பாரம்பரிய நடனமாக 'கர்பா நடனம்' இருக்கிறது.
கேரளா
பரசுராமரால் உருவாக்கப்பட்டதாக புராணங்கள் சொல்லும் கேரள மாநிலம், 'கடவுளின் தேசம்' என்று அழைக்கப்படுகிறது. இங்கு பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட 108 பகவதி அம்மன் கோவில்கள் இருக்கின்றன. நவராத்திரி விழாவின் போது, இந்த 108 கோவில்களும், துர்க்கையின் ஆலயங்களாக பாவித்து, அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இந்தியாவில் கல்வி அறிவு அதிகம் பெற்ற மாநிலமாகத் திகழும் கேரளாவில், தங்களின் கல்வி சார்ந்த பொருட்கள், வீட்டு விலங்குகள், வாகனங்களை வழிபடுவதை மக்கள் விரும்புகிறார்கள். நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறார்கள். அப்போது மாணவர்கள் கரும்பு அல்லது வெல்லம் போன்ற நைவேத்தியங்களுடன், தங்களின் கல்வி சார்ந்த பொருட்களை சரஸ்வதி தேவியின் உருவத்திற்கு முன்பாக வைத்து வணங்குகிறார்கள்.
ஆந்திரா
நவராத்திரி பண்டிகையானது 'பதுக்கம்மா பண்டிகை' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த திருமணமான பெண்கள் பலரும், இனிமையான தாம்பத்ய வாழ்க்கை அமைய அன்னை கவுரி தேவியை வழிபடும் நிகழ்வாக இது இருக்கிறது. திருமணமாகாத பெண்கள், தங்கள் மனதிற்கு பிடித்த மண வாழ்க்கை அமைய வேண்டும் என்று இந்த வழிபாட்டில் இணைகிறார்கள். இந்த பண்டிகையின் இறுதிநாள் விழாவில், ராமலீலா நிகழ்வு நடத்தப்படும். அதாவது ராவணனின் உருவ பொம்மை செய்து, அதை நெருப்பு மூட்டி எரியூட்டுவார்கள். இந்த நிகழ்வில் ஆண்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள். அன்னை கவுரி தேவியின் வழிபாட்டிற்காக உள்ளூரில் உருவாகும் மலர்களைக் கொண்டு மலர் அடுக்குகளை உருவாக்குவார்கள். இது பன்னெடுங்காலமாக நடைபெறும் வழக்கமாகும். திருவிழாவின் இறுதிநாளில் இந்த மலர் அடுக்கானது, ஒரு ஏரி அல்லது ஆற்றில் விடப்படும்.
கர்நாடகா
கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெறும் தசரா உலகப் புகழ் பெற்றதாகும். இது ஒரு மாநில விழாவாகும். மைசூர் நகரின் மையத்தில் மிகவும் கண்கவர் நிகழ்ச்சிகளுடன் இந்த விழா கொண்டாடப்படுகிறது. கி.பி. 1610-ம் ஆண்டு முதல் அப்போதைய மன்னன் முதலாம் ராஜா உடையார் கடைப்பிடித்த சடங்குகளைப் பின்பற்றியே, இன்றளவும் இந்த மைசூர் தசரா நடைபெற்று வருகிறது. ஒன்பதாம் நாள் திருவிழாவான, மகாநவமி அன்று, அரச வாள் ஒரு சிம்மாசனத்தில் வைத்து வணங்கப்படும். அதன்பின்னர் யானைகள் மற்றும் குதிரைகள் மூலமாக அந்த வாள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். 10-ம் நாள் தசமி அன்று, யானை மேல் தங்க பல்லக்கில், சாமுண்டீஸ்வரியின் (துர்க்கையின் வடிவம்) உருவத்தை வைத்து, நடனக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் சூழ்ந்துவர பிரமாண்டமான ஊர்வலம் நடைபெறும்.
இமாச்சலப் பிரதேசம்
நாட்டின் பிற மாநிலங்களில் நவராத்திரி கொண்டாட்டம் முடியும் பத்தாம் நாளில், இமாச்சலப் பிரதேசத்தில் இந்த விழா தொடங்குகிறது. 14 ஆண்டுகள் வனவாசம் சென்ற ராமர், அயோத்தி திரும்பியதை குறிக்கும் வகையில் இந்த கொண்டாட்டம் இருக்கும். பத்தாம் நாளில் 'குலு தசரா' என்ற பெயரில் இந்த நிகழ்வை நடத்துகிறார்கள். குலு பள்ளத்தாக்கின் மிகப் பிரபலமான திருவிழா இதுவாகும். இந்த நாளில் குலு பள்ளத்தாக்கு முழுவதும் உள்ள தெருக்கள் வண்ண விளக்குகளால் பிரகாசமாக மின்னும். தெய்வங்களின் சிலைகளை பிரதான மைதானத்திற்கு எடுத்துச் செல்லும் பெரிய ஊர்வலம், அந்த ஊர்வலத்துடன் கலந்த மக்களின் உற்சாகம் மற்றும் ஆடல், பாடல் ஆகியவை இந்த விழாவின் சிறப்பம்சமாகும். பல்வேறு நடனம், கலாசார நிகழ்ச்சிகள் இந்த நாளை அழகாக்கும். இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளூர் தெய்வமான ரகுநாதரின் சிலை, அழகாக வடிவமைக்கப்பட்டு ஒரு தேரில் வைக்கப்படும். அந்த தேரை உள்ளூர் மக்கள் கயிறுகளால் இழுத்து நகரத்தின் பல பகுதிகளிலும் வலம் வருவார்கள்.