நல்ல விஷயங்களை பேசுவதால் கிடைக்கும் புண்ணியம்

நல்ல விஷயங்களை பேசுவதால் புண்ணியம் கிடைக்கும்.

Update: 2022-11-01 16:23 GMT

மன்னராக இருந்து வசிஷ்டருடன் ஏற்பட்ட பிரச்சினையால், தவ வாழ்க்கை மேற்கொண்டு ரிஷியாக உயர்ந்தவர், விஸ்வாமித்திரர். அவர்கள் இருவருக்குள் ஆரம்ப காலத்தில் பிணக்குகள் இருந்தாலும், அதன் பின் இயல்பாக பழகி வந்தனர். ஒரு முறை விஸ்வாமித்திரரின் ஆசிரமத்திற்கு வசிஷ்ட மகரிஷி வருகை தந்தார். அப்போது அவர்கள் இருவரும் பல விஷயங்களைப் பற்றி கலந்துரையாடினர்.

வசிஷ்டர் விடைபெற்று செல்லும் போது, அவருக்கு மறக்க முடியாத அன்பளிப்பை வழங்க நினைத்த விஸ்வாமித்திரர், ஆயிரம் ஆண்டுகள் தவத்தால் தனக்கு கிடைத்த சக்தியை வசிஷ்டருக்கு வழங்கினார். அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட வசிஷ்டர், நன்றி கூறி அங்கிருந்து புறப்பட்டார்.

இன்னொரு சமயம் விஸ்வாமித்திரர், வசிஷ்டர் வசித்து வந்த ஆசிரமத்திற்குச் சென்றிருந்தார். அவரை அன்புடன் உபசரித்து வரவேற்ற வசிஷ்டர், விஸ்வாமித்திரருடன் புண்ணியம் தரும் ஆன்மிக விஷயங்களைப் பற்றி மட்டும் பேசினார். இருவரும் விடைபெறும் தருணத்தில், விஸ்வாமித்திரருக்கு அன்பளிப்பு வழங்க நினைத்த வசிஷ்டர், "நாம் இதுவரை பேசியதற்கு கிடைத்த புண்ணிய பலனை உமக்கு அளிக்கிறேன்" என்றார்.

விஸ்வாமித்திரரின் முகம் களை இழந்து போனது. 'நாம் வசிஷ்டருக்கு, ஆயிரம் ஆண்டு தவத்தின் பலனை வழங்கினோம். ஆனால் அவர், சில மணி நேரம் பேசியதற்கான பலனை வழங்குகிறாரே' என்று நினைத்தார்.

அதை குறிப்பால் உணர்ந்துகொண்ட வசிஷ்டர், "நீங்கள் எனக்கு அளித்த ஆயிரம் ஆண்டு தவப்பயனுக்கு, இந்த அரை நாள் நல்ல விஷயங்கள் பற்றி பேசிய புண்ணியம் எப்படி சமமாகும் என்று தானே யோசிக்கிறீர்கள்?" என்று கேட்டார். விஸ்வாமித்திரரும் தலையாட்டினார்.

"எது உயர்ந்தது என்பதை நாம் பிரம்மாவிடமே கேட்டு தெரிந்து கொள்வோம்" என்று முடிவு செய்த அவர்கள் இருவரும், பிரம்மதேவன் வசிக்கும் சத்திய லோகம் சென்றடைந்தனர். பிரம்மாவிடம் நடந்ததை விளக்கி, தீர்வு கேட்டனர்.

பிரம்மனோ, "இந்த விஷயத்தில் என்னால் தீர்ப்பு சொல்ல முடியாது. விஷ்ணுவிடம் முறையிடுங்கள்" என்றார்.

வசிஷ்டரும், விஸ்வாமித்திரரும் வைகுண்டம் சென்று, மகாவிஷ்ணுவிடம் இதுபற்றி கேட்டனர். அதற்கு மகாவிஷ்ணு, "தவ வாழ்வில் சிவபெருமானுக்குத் தான் அனுபவம் அதிகம். அவரிடம்தான் இதுபற்றி கேட்க வேண்டும்" என்றார்.

இதையடுத்து இருவரும் கயிலாயம் சென்று சிவனின் முன்பாக முறையிட்டனர். அப்போது சிவபெருமான், "உங்களுக்கு சரியான விளக்கம் வேண்டுமென்றால், பூமியைத் தாங்கியபடி பாதாளத்தில் இருக்கும், ஆதிசேஷனிடம் சென்று கேளுங்கள்" என்று அனுப்பி வைத்தார்.

இப்போது வசிஷ்டரும், விஸ்வாமித்திரரும் ஆதிசேஷன் முன்பாக நின்றனர். அவர்களின் பிரச்சினையை முழுவதுமாக கேட்ட ஆதிசேஷன், "இதற்கு கொஞ்சம் யோசித்துதான் பதில் சொல்ல வேண்டும். அதுவரை உங்களில் யாராவது இந்த பூமியை கொஞ்சம் தாங்குங்கள். தலையில் சுமப்பது கடினம், எனவே ஆகாயத்தில் நிறுத்தி வையுங்கள்" என்றார்.

உடனே விஸ்வாமித்திரர், "நான் ஆயிரம் ஆண்டுகள் செய்த தவத்தின் சக்தியை கொடுக்கிறேன். அதன் பயனாக பூமி ஆகாயத்தில் நிலைபெற்று நிற்கட்டும்" என்றார். ஆனால் பூமியில் எந்த மாற்றமும் உண்டாகவில்லை. அது ஆதிசேஷனின் தலையிலேயே நின்று கொண்டிருந்தது.

இப்போது வசிஷ்டர், "அரைமணி நேரம் நல்ல விஷயங்களை பேசியதால் உண்டாகும் புண்ணியத்தை கொடுக்கிறேன். இந்த பூமி அந்தரத்தில் நிற்கட்டும்" என்றார்.

மறுகணமே ஆதிசேஷனின் தலையில் இருந்த பூமி, அந்தரத்தில் நின்றது.

ஆதிசேஷன், பூமியை எடுத்து மீண்டும் தன் தலையில் வைத்துக்கொண்டு "நல்லது.. நீங்கள் இரு வரும் வந்த வேலை முடிந்துவிட்டது. போய் வாருங்கள்" என்றார்.

"ஆதிசேஷரே.. தீர்வு கூறாமல் அனுப்பினால் எப்படி" என்று ரிஷிகள் இருவரும் கேட்க, "உண்மையை நேரில் பார்த்த பிறகு தீர்ப்பு சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆயிரம் ஆண்டு தவசக்தியால் அசையாத பூமி, அரைமணி நேர நல்ல விஷயங்கள் பேசிய பலனுக்கு அசைந்து விட்டது. அப்படியானால், எது சிறந்தது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்" என்றார்.

வசிஷ்டரும், விஸ்வாமித்திரரும் தெளிந்த மனதுடன் அங்கிருந்து புறப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்