ஆவணி மாத பவுர்ணமி: திருவண்ணாமலையில் விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

ஆவணி மாத பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

Update: 2024-08-20 03:18 GMT

திருவண்ணாமலையில்,

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று அதிகாலை 2.50 மணியளவில் தொடங்கியது.

பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு முதல் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் செல்ல தொடங்கினர். நேற்று மதியத்திற்கு மேல் ஏராளமான பக்தர்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர். மாலையில் இருந்து கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

பவுர்ணமி கிரிவலமானது இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1.02 மணியளவில் நிறைவடைந்தது. இருப்பினும் பக்தர்கள் தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதையில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியிலும், போக்குவரத்தை சீர் செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோவிலில் பக்தர்கள் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலில் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்