சத்தி சிக்கரசம்பாளையத்தில் பண்ணாரி மாரியம்மன் திருவீதி உலா
சத்தி சிக்கரசம்பாளையத்தில் பண்ணாரி மாரியம்மன் திருவீதி உலா நடைபெற்றது. வழிநெடுக நின்று பக்தர்கள் தரிசனம் செய்தார்கள்.
சத்தியமங்கலம்
சத்தி சிக்கரசம்பாளையத்தில் பண்ணாரி மாரியம்மன் திருவீதி உலா நடைபெற்றது. வழிநெடுக நின்று பக்தர்கள் தரிசனம் செய்தார்கள்.
திருவீதி உலா
சத்தியமங்கலத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழா அடுத்த மாதம் 4-ந் தேதி அதிகாலை நடைபெறுகிறது. இதற்காக நேற்று முன்தினம் இரவு கோவிலில் பூச்சாட்டப்பட்டது. அன்று இரவு பண்ணாரி மாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன் திருவீதி உலா அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புறப்பட்டது. இரவு சிக்கரசம்பாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் சப்பரம் வைக்கப்பட்டது.
நேற்று காலை 7.30 மணி அளவில் அங்கிருந்து மேள, தாளங்கள் முழங்க சப்பர திருவீதி உலா தொடங்கியது. சிக்கரசம்பாளையத்தில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் சப்பரம் சென்றது.
வழிநெடுகிலும் வணங்கினர்...
வீடுதோறும் வாசலை சுத்தம் செய்து, தண்ணீர் தெளித்து தட்டில் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து வழிநெடுகிலும் அம்மனை பக்தர்கள் வரவேற்று வணங்கினர்.
வீதி உலா முடிந்ததும் மாலை 4 மணி அளவில் சப்பரம் மீண்டும் சிக்கரசம்பாளையம் மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. கூலி வேலைக்கு சென்று மாலை 5 மணி அளவில் வீடு திரும்பிய தொழிலாளர்களும் கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட்டனர்.
அதன்பின்னர் நேற்று இரவு அம்மன் சப்பரம் அங்கிருந்து புறப்பட்டு சிக்கரசம்பாளையம் புதூர் மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) அங்கு திருவீதி உலா நடைபெறுகிறது.