ஈஸ்வரன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை வழிபட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை வழிபட்டனர்.
கோபி
கோபி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பாரியூர் அமரபணீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி சிவகாமி அம்பாள் சமேத நடராஜ சாமிகளுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அதிகாலை 5 மணி அளவில் நடராஜர் மகா ஹோமம் நடத்தப்பட்டு 6.30 மணிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பின்னர் காலை 7 மணி அளவில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. நடராஜர், சிவகாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் கோபி பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் உள்ள நடராஜர் சிவகாமி அம்பாள், கோபி விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வர சாமி கோவில், காசிபாளையம் காசி விஸ்வநாதர் கோவில், மொடச்சூர் ஈஸ்வரன் கோவில், வாய்க்கால் ரோடு ஈஸ்வரன் கோவில் மற்றும் கோபி பகுதிகளில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமியை வழிபட்டு சென்றனர்.
சிவகாமி நடராஜர்
கோபி அருகே உள்ள கூகலூரில் மரகதபள்ளி சமேத மத்தியபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நேற்று ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதையொட்டி சிவகாமி சமேத நடராஜர் தனி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
அந்தியூர்-புஞ்சைபுளியம்பட்டி
அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலில் சிவகாமி அம்பாள் நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதில் நடராஜர் சிவகாமி அம்பாளுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
இதேபோல் புஞ்சைபுளியம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை 4 மணி அளவில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அலங்கார பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருவீதி உலா நடைபெற்றது.
சென்னிமலை
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சென்னிமலையில் உள்ள கைலாசநாதர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 8 மணி அளவில் நடராஜப்பெருமான், முருகப்பெருமான் மற்றும் வள்ளி - தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நடராஜப்பெருமான் வெள்ளி விமானத்திலும், முருகப்பெருமான் வள்ளி - தெய்வானையுடன் வெள்ளி கவசத்திலும் எழுந்தருளி 4 ராஜ வீதிகளிலும் திருவீதி உலா வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பவானி-சத்தியமங்கலம்
பவானியில் பிரசித்தி பெற்ற பவானி சங்கமேஸ்வரர் கோவிலின் உப கோவிலான காசி விஸ்வநாதர் உடனமர் விசாலாட்சி அம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு பால், தேன், இளநீர், திருமஞ்சனம் உள்பட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
சத்தியமங்கலத்தில் உள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதில் ஸ்ரீதேவி கருமாரியம்மனுக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கொடுமுடி-ஊஞ்சலூர்
கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மும்மூர்த்திகளான மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜரை தரிசனம் செய்தார்கள். குறிப்பாக நடராஜர் ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா தரிசனத்தின் போது மட்டுமே வெளி மண்டபத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நேற்று வெளி மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிவகாமி சமேத நடராஜர் கொடுமுடியில் திருவீதி உலா வந்தார்.
இதேபோல் ஊஞ்சலூர் நாகேஸ்வரர் கோவில், கொளாநல்லி பாம்பலங்கார சாமி கோவில், கொந்தளம் நாகேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது.
அம்மாபேட்டை
அம்மாபேட்டையில் மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள சிவகாமி சமேத ஆனந்தநடராஜர் உற்சவர் சிலைக்கு பால் தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், திருமஞ்சனம், இளநீர், பஞ்சகாவியம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.