திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது.

Update: 2024-07-08 03:42 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் தினமும் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். விடுமுறை நாட்களிலும், விஷேச நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனி பிரம்மோற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான விழா நேற்று காலை 7 மணி அளவில் மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் உற்சவம் ஆகும்.

முதல் நாளான நேற்று கோவிலில் அதிகாலையில் சாமிக்கும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், விநாயகர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் சாமி சன்னதியில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தின் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் கூற மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றம் வெகு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், விநாயகர் மாட வீதி உலா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் விநாயகர் உற்சவம் நடந்தது. இதையொட்டி காலையிலும், மாலையிலும் விநாயகர் வீதி உலா நடைபெற்றது. இந்த விழா வருகிற 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

விழா நாட்களில் காலையிலும், மாலையிலும் விநாயகர், சாமி வீதியுலா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழுத் தலைவர் ஜீவானந்தம், உறுப்பினர்கள் மீனாட்சி சுந்தரம், ராஜாராம், கோமதிகுணசேகரன், இரா.பெருமாள் மற்றும், கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்