ஆடி வெள்ளிக்கிழமை: அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை - பக்தர்கள் வழிபாடு

ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Update: 2024-07-19 15:04 GMT

சென்னை,

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். குறிப்பாக வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் அம்மனுக்கு கூழ்வார்த்தல், பொங்கல் வைத்தல், சிறப்பு பூஜைகள் நடைபெறும். பக்தர்களும் அதிக அளவில் இந்த பூஜைகளில் கலந்துகொண்டு அம்மனை தரிசிப்பார்கள். தமிழகத்தில் உள்ள பல அம்மன் கோவில்களில் ஆடி மாதமே திருவிழா நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும்.

இந்த நிலையில், ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் பூஜைகளும் நடைபெற்றது.

குறிப்பாக, மதுரை மாவட்டம் வண்டியூரியில் உள்ள தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் சர்வ அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். பொங்கல் வைத்தல், நெய் விளக்கு மற்றும் மாவிளக்கு ஏற்றுதல் உள்ளிட்ட வழிபாடுகளும் நடைபெற்றது. பக்தர்களுக்கு கோயில் சார்பில், கூழ் காய்ச்சி ஊற்றப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் ஆலயத்திற்கு, ஏராளமான பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து வந்து, சாமி தரிசனம் செய்தனர். மேலும் பல பக்தர்கள், வேப்பஞ்சேலை அணிந்தும், கரகம் ஏந்தி வந்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

புதுச்சேரி, ரோடியர்பேட் பகுதியில் உள்ள பொன்னியம்மன் ஆலயத்தில், 108 பெண்கள் பால்குடம் எடுத்தனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. திருவண்ணாமலை நகரில் உள்ள ஸ்ரீ பச்சையம்மன் மன்னார் சாமி கோயிலில், கோழி மற்றும் கிடா வெட்டி, பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.

 

Tags:    

மேலும் செய்திகள்