பரிகார பூஜைகளுக்கு ஏற்ற ஆடி அமாவாசை

எந்தவொரு பரிகாரப் பூஜையாக இருந்தாலும், அமாவாசையன்று செய்தால் நல்ல பலன்கள் கிட்டும்.

Update: 2024-07-17 06:08 GMT

அமாவாசையன்று எந்த கிரகமும் தோஷம் பெறுவதில்லை. இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விஷயங்களை மேற்கொண்டால் வெற்றியாக முடியுமென்பர். இறைவழிபாடு, மருந்து உண்ணுதல், நோயாளிகளைக் குளிப்பாட்டுதல் உள்ளிட்ட செயல்களை அமாவாசையன்று துவங்கலாம் என்று சித்த நூல்கள் கூறுகின்றன.

எந்தவொரு பரிகாரப் பூஜையாக இருந்தாலும், அமாவாசையன்று செய்தால் நல்ல பலன்கள் கிட்டும். குரு தோஷம், ராகு- கேது தோஷம், சர்ப்ப தோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் ஆகியவற்றுக்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது.

மேலும் இந்த காரியங்களுக்கு தட்சிணாயன கால ஆடி அமாவாசை உகந்த நாளாகக் கருதப்படுகிறது. அன்று நீர் நிலையில் பிதுர்பூஜை செய்து வேதவிற்பன்னருக்குரிய சன்மானம் அளித்தபின், அன்னதானம் செய்வதும், மாற்றுத்திறனாளிக்கு வசதிக்கேற்ப ஆடை தானம் வழங்குவதும் முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். நீர்நிலையில் பிதுர்பூஜைகள் மேற்கொள்ளப்பட்டபின் வீட்டிற்கு வந்ததும், பூஜையறையில் முன்னோர்களின் படங்கள் முன் னிலையில் அவர்களை நினைத்து தலைவாழை இலையில் பலவிதமான காய்கறிகளை சமைத்து, வடை, பாயசத்துடன் பெரிய அளவில் படையல்போட்டு வழிபடவேண்டும். அவரவர் குல வழக்கப்படி இந்தப் பூஜையை மேற்கொள்ளவேண்டும். இதனால் முன்னோர்களின் ஆசி கிட்டுவதுடன், வீட்டில் தீய சக்தி இருந்தால் அது விலகியோடும். இல்லத்தில் உள்ளவர்களும் சகல சவுபாக்கியங்களுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. 

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு... https://www.dailythanthi.com/Others/Devotional

Tags:    

மேலும் செய்திகள்