சூரியனுக்கு அருள் செய்த வியாசர்பாடி ரவீஸ்வரர்

வேதங்களை இயற்றிய வியாசர் வழிபட்ட தலம் இது. இத்தலம் அவரது பெயரால் ‘வியாசர்பாடி’ எனப்படுகிறது.

Update: 2022-04-26 11:26 GMT
சென்னை வியாசர்பாடி பகுதியில் இருக்கிறது, ரவீஸ்வரர் திருக்கோவில். சூரிய பகவானின் மனைவி பெயர் சமுக்ஞாதேவி. இவளால், சூரியனின் வெப்பத்தை தாங்க முடியவில்லை. இதனால் தன்னுடைய நிழலைப் பெண்ணாக வடித்து, சூரியனிடம் விட்டு விட்டு, தன்னுடைய தந்தையின் இருப்பிடம் சென்று விட்டாள். நிழலில் இருந்து உருவான பெண்ணிற்கு ‘சாயாதேவி’ என்று பெயர்.

இதையறிந்த சூரியன், மனைவி சமுக்ஞாதேவியைத் தேடிச் சென்றார். வழியில் பிரம்மா ஒரு யாகத்தை நடத்திக் கொண்டிருந்தார். மனைவியைத் தேடும் மனநிலையில் இருந்த சூரியன், பிரம்மாவைக் கவனிக்கவில்லை. இதையறியாத பிரம்மன், சூரியன் தன்னை அவமதித்து விட்டதாக நினைத்து, அவரை மனிதப் பிறப்பெடுக்கும்படி சாபம் இட்டார்.

இந்த சாபம் நீங்க என்ன வழி என்று, நாரதரிடம் ஆலோசனைக் கேட்டார், சூரியன். நாரதர் சொன்ன ஆலோசனைபடி, இந்தத் தலத்திற்கு வந்த சூரியன், வன்னி மரத்தடியில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பல நாள் பூஜைக்குப் பிறகு, சூரியனுக்கு காட்சியளித்தார், சிவபெருமான். அதோடு சூரியனுக்கு சாப விமோசனத்தையும் வழங்கினார். சூரியனுக்கு விமோசனம் அளித்தவர் என்பதால் ‘ரவீஸ்வரர்’ என்று அழைக்கப்பட்டார். சூரியனுக்கு ‘ரவி’ என்ற பெயரும் உண்டு.

இந்தக் கோவிலில் கிழக்கு நோக்கி வீற்றிருந்து சிவபெருமான் அருள்பாலிக்கிறார். இவரது சன்னிதி எதிரில் வாசல் கிடையாது. தென்திசையில் உள்ள வாசல் வழியாக நுழைந்துதான், இவரைத் தரிசிக்க முடியும். சிவனுக்கு எதிரேயுள்ள சுவரில் சிவலிங்கம் வடிவத்தில் ஒரு துளைஅமைத்துள்ளனர். இதற்கு நேரே நந்தி இருக்கிறது. தினமும் காலையில் சூரியனின் ஒளி சிவலிங்க வடிவ துளையின் வழியாக, சுவாமியின் மீது விழுகிறது.

ஒளிபட்ட பிறகே, காலை பூஜையை அர்ச்சகர்கள் செய்கின்றனர். சிவன் சன்னிதி முன் மண்டபத்தில் சூரியன் இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமைகள், உத்தராயன, தட்சிணாயன புண்ணிய கால தொடக்கம், பொங்கல், ரதசப்தமி ஆகிய நாட்களில் சிவன் மற்றும் சூரியனுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் சூரியனுக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

முற்காலத்தில் இங்கு சிவன் சன்னிதி மட்டும் இருந்தது. இப்பகுதியை ஆண்ட வீச்சாவரன் என்னும் மன்னனுக்கு புத்திரப்பேறு இல்லை.

தனக்கு அப்பாக்கியம் தரும்படி சிவனை வேண்டினான். சிவன், அம்பிகையிடம் மன்னனின் மகளாகப் பிறக்கும்படி பணித்தார். அதன்படி, மன்னனின் அரண்மனை நந்தவனத்தில் உள்ள மகிழ மரத்தினடியில், அம்பிகை குழந்தை வடிவில் தவழ்ந்தாள். அவளைக் கண்ட மன்னன், மரகதாம்பிகை என பெயர் சூட்டி வளர்த்தான். சிவன் அவளை மணந்து, தன்னுடன் ஐக்கியப்படுத்திக்கொண்டார். பின், அம்பாளுக்கு சன்னிதி எழுப்பப்பட்டது. சிவன் அம்பிகையை திருமணம் செய்த வைபவம் ஆனி பிரமோற்சவத்தின்போது நடக்கிறது. நீண்ட நாட்களாக திருமணமாகாத பெண்கள் அம்பாளிடம் வேண்டிக் கொள்ள திருமணத் தடை நீங்குவதாக நம்பிக்கை.

வேதங்களை இயற்றிய வியாசர் வழிபட்ட தலம் இது. இத்தலம் அவரது பெயரால் ‘வியாசர்பாடி’ எனப்படுகிறது. சிவன் சன்னிதிக்கு பின்புற பிரகாரத்தில் இவருக்கு சன்னிதி இருக்கிறது. புலித்தோல் மீது, பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் வியாசர் சிலை வடிக்கப்பட்டிருக்கிறது. வலதுகையில் சின் முத்திரை காட்டி, இடது கையில் சுவடி வைத்திருக்கிறார். பவுர்ணமிஅன்று இவருக்கு வில்வ மாலை அணிவித்து விசேஷ பூஜை செய்கின்றனர். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன், இவரிடம் வேண்டிக் கொண்டால் கல்வி சிறக்கும்.

வியாசர் சன்னிதி அருகில் ‘முனைகாத்த பெருமாள்' சன்னிதி இருக்கிறது. வியாசர் மகாபாரதக் கதையைச் சொன்னபோது, விநாயகர் தனது தந்தத்தை உடைத்து எழுதினார் என்று புராணங்கள் சொல்கிறது. அப்போது, தந்தத்தின் கூரிய முனை, மழுங்கி விடாமல் இந்தப் பெருமாள் காத்தருளினார். எனவே இவர், ‘முனை காத்த பெருமாள்' ஆனார்.

மேலும் செய்திகள்