கங்கா ஸ்நானம்
நதிகளிலேயே புனிதத்துவம் வாய்ந்ததாக ‘கங்கை’ பெருமைப்படுத்தப்படு கின்றது. ஆனால் அனைவராலும் கங்கை நதியில் நீராட முடியுமா என்பது கேள்விக்குறிதான். அதே நேரம் நாம் இருக்கும் இடத்திலேயே ‘கங்கா ஸ்நானம்’ செய்ய முடியும் என்றும் சொல்கிறார்கள். அதற்கு சில வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது...
நீராடும் போது, கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று நீராட வேண்டும். கர்ம காரியங்களைச் செய்து வந்தால் தான் தெற்கு திசை நோக்கி நின்று நீராட வேண்டும். மேற்கு நோக்கி நின்று நீராடுவதால், உடல் வலி உண்டாகும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஒவ்வொரு முறை நீராடுவதற்கும் முன்பாக, ஒரு சொம்பு நீரில் மோதிர விரலைக் கொண்டு, ‘ஓம்’ என்று எழுதி, சில நிமிடம் தியானம் செய்யுங்கள். இதனால் அந்த நீர், கங்கையின் புனிதத்துவத்தை அடையும்.
எப்படிப் பிடித்தாலும், நெருப்பு மேல் நோக்கியே எரியும் என்பதை அனைவரும் அறிவோம். நம் உடலில் உள்ள அக்னியும் மேல்நோக்கியே பயணிப்பதுதான் சரியானதாக இருக்கும். ஏனெனில் எப்படிப்பட்ட அக்னியின் வேகத்தையும் தாங்கும் சக்தி, நம் முடைய உடலில் மண்டை ஓட்டிற்கு மட்டுமே இருக்கிறது. அதனால்தான் நம் முன்னோர்கள், ‘நீராடும் போது முதலில் தண்ணீரால் காலை நனைத்து, கொஞ்சம் கொஞ்சமாக மேல்நோக்கி வந்து, இறுதியாக தலையில் நீரை ஊற்ற வேண்டும்’ என்று சொல்லி வைத்தார்கள்.
நம் உடலில் தலை முதல் கால் வரையான பின்பகுதியை ‘பிரஷ்டம்’ என்கிறார்கள். இதில் முதுகுதான் பெரியது. அங்கு உடல் சூடு அதிகமாக இருக்கும். எனவே நீராடி முடித்ததும், முதலில் முதுகு பாகத்தைத்தான் துவட்ட வேண்டும் என்கிறார்கள். அதுவும் நீராடும் நீரில் துண்டை நனைத்து பிழிந்து துவட்டுவதுதான் சரியானது என்றும் சொல்லப்படுகிறது. உலர்ந்த துணி யானது, உடலின் உள்சூட்டை வேகமாக பரவச் செய்து, பலவித நோய்களை உருவாக்கக்கூடும்.
‘நீரின்றி அமையாது உலகு’ என்பது சான்றோர் வாக்கு. நீர் இல்லாவிட்டால் எந்த உயிர்களும் வாழ முடியாது என்ற உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும். மாறாக நீரை விரயம் செய்தால், கடன் அதிகரிக்கும். நீர்நிலைகளில் தெய்வங்கள் வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. ‘நாரம்’ என்பது ‘தண்ணீர்’ என்றும் பொருள்படும். அதனால்தான் திருப்பாற்கடலில் குடிகொண்டிருக்கும் பெருமாளை ‘நாராயணன்’ என்கிறோம். இந்த நீர்நிலைகளில் காரி உமிழ்வது கூடாது.