சரஸ்வதி அவதரித்த வசந்த பஞ்சமி

ஆடி மாத அமாவாசையை அடுத்து வரும் பஞ்சமி திதியை, ‘கருட பஞ்சமி’ என்பார்கள். இந்த தினத்தில் கருடனை வழிபாடு செய்வது சிறப்பான பலனைத் தரும். அதே போல், ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்திக்கு மறுநாளில் வரும் பஞ்சமி திதியானது, ‘ரிஷி பஞ்சமி’ என்று அழைக்கப்படுகிறது.;

Update:2021-02-16 17:46 IST
இந்த நாளில் பெண்கள் அனைவரும் விரதம் இருந்து வழிபடுவது சகல சவுபாக்கியங்களையும் பெற்றுத் தரும். இந்த இரண்டு பஞ்சமி தினங்களைத் தவிர்த்து, ‘வசந்த பஞ்சமி’ என்ற சிறப்புமிக்க தினமும் உள்ளது. ஆனால் அது தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெரிய அளவில் கொண்டாடுவது இல்லை.ஏனெனில் தமிழகத்தில் சரஸ்வதி வழிபாடு என்பது புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியை ஒட்டி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் வட நாட்டில் இந்த நிகழ்வை துர்க்கை வழிபாடாக நடத்துவார்கள். வசந்த பஞ்சமி தினத்தைத்தான், வடநாட்டினர் சரஸ்வதியை வழிபடுவதற்கான விழாவாக கடைப்பிடிக் கிறாா்கள். தமிழ்நாட்டில் முன் காலத்தில் காமன் பண்டிகை என்ற பெயரில் வசந்த பஞ்சமி கொண்டாடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

உலகத்தில் உள்ள அண்ட சாரசரங்களையும், அதில் பல்வேறு விசித்திரமான உயிரினங்களையும் படைத்த பிரம்மனுக்கு, அவற்றின் மூலமாக திருப்தி ஏற்படவில்லை. ஏனெனில் இந்த உலகமானது மிகவும் அமைதியாக, ஒலிகள் இன்றி இருந்தன. இது பிரம்மதேவனின் மனதில் வருத்தத்தை உண்டாக்கியது. அப்போது அவரது கையில் இருந்த கமண்டலத்தில் இருந்து சில துளி நீர் கீழே சிந்தி யது. அதில் இருந்து ஒரு பெண் வெளிப்பட்டாள். அந்த சக்தியானவள், தனது கையில் சுவடிகளையும், ஸ்படிக மாலையையும் வைத்திருந்தாள். அதோடு தன்னுடைய மடியில் வீணை ஒன்றைத் தாங்கி, அதை தன் கரங்களால் மீட்டத் தொடங்கினாள். அதில் இருந்து தெய்வீகமான இசை வெளிப்பட்டது. அந்த இசையின் மூலமாக, பிரம்மனின் படைப்புகள் அனைத்தும் ஓசை நயம் பெற்றன. கடல் பெரும் இரைச்சலுடன் அலைகளை உண்டாக்கின. ஆறுகள் ஓடும் சத்தம் சலசலக்கத் தொடங்கியது. மனிதன் மொழியறிவைப் பெற்றான். காற்று பெரும் சத்தத்துடன் வீசத் தொடங்கியது. மற்ற அனைத்து உயிரினங்களும் தங்களது இருப்பை சத்தத்தின் வாயிலாக வெளிப்படுத்தின.

இதைக் கண்ட பிரம்மதேவன் மகிழ்ச்சி அடைந்தார். அந்த பெண் சக்தியை பலவிதமாக போற்றினார். அவளே ‘சரஸ்வதி.’ மேலும் அந்தப் பெண்ணை தன்னுடைய நாக்கில் அமர்த்திக்கொண்டார். சரஸ்வதி தோன்றிய நாளே ‘வசந்த பஞ்சமி’ என்று சில புராணங்கள் சொல்கின்றன. இந்த சிறப்புமிக்க நாளில் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்து வந்தால், ஞானத்தில் சிறந்து விளங்கலாம். வடமாநிலங்களில் ஒன்றான மேற்குவங்கத்தில், வசந்த பஞ்சமி அன்றுதான், குழந்தைகளின் கல்வியைத் தொடங்குகிறார்கள். அந்த நேரத்தில் குழந்தைகளின் முன்பாக பென்சில், பேனா, சிறிய தொழில்நுட்ப கருவிகள் என்று பலவிதமான பொருட்களை வைப்பாா்கள். அதில் இருந்து குழந்தை எதை எடுக்கிறதோ, அதில் ஆர்வமும், எதிர்காலமும் அமையும் என்ற நம்பிக்கை அவர்களிடையே நிலவுகிறது.

பஞ்சாப், அரியானா, ஜம்மு-காஷ்மீர், அசாம், திரிபுரா, ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் வசந்த பஞ்சமி அன்று நடைபெறும் சரஸ்வதி வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அன்றைய தினம் சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் வண்ண ஆடைகளை அணிவித்து வழிபாடு செய்வார்கள். அன்று ஒருநாள் மட்டும் மஞ்சள் நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். சரஸ் வதிக்கு மஞ்சள் நிற ஆடை, மஞ்சள் நிற மலர் மாலை அணிவிப்பார்கள். பூஜையில் வைக்கப்படும் பிள்ளையார் கூட, மஞ்சளில் பிடித்துதான் வைப்பார்கள். சரஸ்வதிக்கு படைக்கப்படும் நைவேத்தியங்களும், லட்டு உள்ளிட்ட 
மஞ்சள் நிற நைவேத்தியங்களாகவே இருக்கும். பஞ்சாப் பகுதிகளில் இந்த காலகட்டத்தில்தான் கடுகு செடியில் மஞ்சள் நிறப்பூக்கள் பரவலாக பூத்துக் குலுங்கும். அதனை அடிப்படையாகக் கொண்டே இப்படி மஞ்சள் வண்ணம் பூசப்படுவதாக சொல்கிறார்கள். இல்லங்களில் கூட அனைவரும் மஞ்சள் நிற ஆடை களையே அணிவார்கள். குஜராத் மாநிலங்களில், இளைஞர்கள் பல வண்ண பட்டங்களை காற்றில் பறக்கவிடுவார்கள்.

ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் உள்ள பிரம்மா - சரஸ்வதி கோவில், கர்நாடகத்தில் உள்ள உடுப்பி கிருஷ்ணர் கோவில், ஒடிசாவில் உள்ள பூரி ஜெகன் நாதர் கோவில் ஆகிய தலங்களில் வசந்த பஞ்சமி திருநாள் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்