பைபிள் கூறும் வரலாறு : யோவான் எழுதிய முதல் நூல்

யோவான் இயேசுவின் பிரியத்துக்குரிய சீடர்களில் ஒருவர். இயேசுவோடு இணைந்து பயணித்தவர். விவிலியத்தின் மிக முக்கியமான புத்தகமான யோவான் நற்செய்தியை எழுதியவர் இவர் தான்.

Update: 2020-03-24 08:06 GMT
 பிற்காலத்தில் அவர் எழுதிய திருமுகங்களில் ஒன்று இது. இதன் ஆசிரியர் யோவான் என்பதை ஆதித்திருச்சபை தந்தை இரேனியுஸ் போன்றோர் உறுதிப்படுத்தியுள்ளனர். கி.பி. 90களில் இதை எழுதினார் என நம்பப்படுகிறது. யோவான் நற்செய்திக்கும் இதற்கும் நிறைய ஒப்புமைகளும், சில வேற்றுமைகளும் உள்ளன.

திருச்சபையில் எழுந்த தவறான சிந்தனைகளுக்கு விளக்கம் கொடுப்பதற்காக எழுதப்பட்ட கடிதமாக இது இருக்கலாம். குறிப்பாக அந்தக் காலத்தில் எழுந்த அறிவுத்திறன் கொள்கைக்கு எதி ராகவும், அதைப் பரப்பிய செரிந்துஸ் என்பவருக்கு எதிராகவும் இந்த கடிதம் எழுதப்பட்டிருக்கலாம் என சில விவிலிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

செரிந்துஸ் என்பவர் இயேசுவின் மனிதம் கலந்த இறை தன்மையை மறுதலித்தவர். உலகம் என்பது கடவுளால் படைக்கப்படவில்லை. அது இன்னொரு சக்தியால் படைக்கப்பட்டது. இயேசு இறை தன்மையோடோ, இறைவனாலேயோ படைக்கப்படவில்லை. அவர் சாதாரண மனிதனாகப் பிறந்தார். அவரது ஞானம், வாழ்க்கை, தூய்மை இவற்றின் காரணமாக திருமுழுக்கின் போது இறைவன் இவர் மீது இறங்கினார். அதனால் அவர் புதுமைகள் செய்து திரிந்தார். கடைசியில் சிலுவை மரணத்திற்கு முன்பு கடவுள் இவரை விட்டுப் பிரிந்து போனார் என்பதே செரிந்துஸ் சொன்ன தத்துவமாகும்.

இதை மறுத்து, இறைவன் மனிதனாகவும், இறைவனாகவும் இருந்தார் என்பதை யோவான் வலி யுறுத்துகிறார். அதுவே விசுவாச வாழ்வுக்கு முக்கியம் என்பதையும் அவர் கோடிட்டுக் காட்டுகிறார். இயேசுவே கிறிஸ்து எனும் விசுவாசம் வேண்டும் என அறிவுறுத்துகிறார். சக மனித அன்பு இந்த நூலில் மிக அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அன்பைப் பற்றி அழகாகப் பேசுவதால் இதை அன்புக் கடிதம் என்றும் அழைப்பதுண்டு.

அந்தி கிறிஸ்து பற்றி மிகத் தெளிவாக எழுதி வைத்தவர் யோவான் தான்.

“ஏமாற்றுவோர் பலர் உலகில் தோன்றியுள்ளனர். இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை இவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இவர்களே ஏமாற்றுவோர், எதிர்க் கிறிஸ்துகள்” என்கிறார் அவர்.

முதல் நூற்றாண்டிலேயே ‘எதிர்கிறிஸ்து’ உலகில் எழுந்திருப்பதாக யோவான் குறிப்பிடுகிறார். ‘இயேசு கிறிஸ்து மனிதனாக வந்தார்’ எனும் உண்மையை ஏற்றுக் கொள்ளாதவர்களை யோவான் ‘எதிர்கிறிஸ்து’ எனக் குறிப்பிடுகிறார். கவனிக்க, ஒருவரல்ல ஒரு விசுவாசத்தை எதிர்ப்பவர்கள் அனைவருமே எதிர்கிறிஸ்துகள் என்பதே அவரது போதனை.

‘இயேசுவை பிரதிபலிக்கிறேன்’ என சொல்லிக்கொண்டு, உண்மையான இயேசுவைப் பிரதிபலிக்காமல் இருக்கின்றவர்களையும் இந்த அந்தி கிறிஸ்து எனும் அடையாளம் குறிப்பிடுகிறது.

“இதுவே இறுதிக்காலம். எதிர்க்கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களே! இப்போது எதிர்க் கிறிஸ்துகள் பலர் தோன்றியுள்ளனர். ஆகவே இறுதிக்காலம் இதுவேயென அறிகிறோம். இவர்கள் நம்மிடமிருந்து பிரிந்தவர்கள்; உண்மையில் இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களே அல்ல; நம்மைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் நம்மோடு சேர்ந்தே இருந்திருப்பார்கள். ஆகையால் இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல” என 1 யோவான் 2:18 குறிப்பிடுகிறது.

எதிர் கிறிஸ்து ஒற்றை நபர் அல்ல, இறைவனை மறுதலிக்கும் யாரும் எதிர்கிறிஸ்துவே என்பதை யோவான் அறுதியிட்டுக் கூறுகிறார். ஆதித் திருச் சபையையும், அவர்களது சிந்தனைகளையும், அவர்களது சித்தாந்தங்களையும் ஏற்றுக்கொள்ளாமல் பிரிந்து போன அனைவரையும் அவர் எதிர் கிறிஸ்து என அழைக்கிறார்.

இயேசுவோடு பயணப்பட்ட யோவான் ஐந்து முறை அந்தி கிறிஸ்து, எதிர்க்கிறிஸ்து எனும் பதத்தை பயன்படுத்துகிறார். ஐந்துமே இறைமகனின் இறைத்தன்மையை மறுதலிக்கும் மக்களைக் குறிக்கிறதே தவிர ஒரு தனி நபரையோ, இயக்கத்தையோ குறிக்கவில்லை என்பதே யோவான் திருமுகம் சொல்லும் உண்மையாகும்.

இயேசுவின் சீடர்களில் நீண்ட நாட்கள் உயிர்வாழ்ந்தவர் இவர் தான். அன்னை மரியாளை கடைசிவரை கவனித்துக் கொண்டவரும் இவர் தான். அன்னை மரியாள் எபேசுவில் இறந்தார் எனவும், அப்போது யோவான் உடனிருந்தார் எனவும் கூறுகிறது கிறிஸ்தவ வரலாறு.

இந்தக் கடிதங்களை எழுதும் போது யோவான் வயது முதிர்ந்தவராக இருந்தார். இயேசுவின் சீடர்களில் மிச்சமிருந்தவரும் இவர் தான். எனவே மிக முக்கியமான சில போதனைகளை எழுதுவது தேவை என கருதி இதை எழுதியிருக்கலாம்.

மிகத் தெளிவாக வாழ்வு-சாவு, இருள்-ஒளி, உண்மை-பொய், கடவுளோடான அன்பு-உலகோடான அன்பு, அன்பு-வெறுப்பு, கிறிஸ்து- அந்தி கிறிஸ்து, சொர்க்கம்- நரகம் என எழுது கிறார்.

கொஞ்சம் இருள், கொஞ்சம் ஒளி என இரண்டும் கலந்த வாழ்க்கை என்பது கிறிஸ்தவத்தில் சாத்தியமில்லை என்பதே அவர் நிலைநிறுத்தும் போதனையாகும்.

‘கடவுளே அன்பு’ எனும் வார்த்தைப் பிரயோகம் இந்த நூலின் சிறப்பம்சம். ஆன்மிக நிலையில் எப்படியெல்லாம் நாம் வளரவேண்டும், எதையெல்லாம் மனதில் கொள்ளவேண்டும் என்பதை மிகத் தெளிவாக இந்த நூல் நமக்கு விளக்குகிறது.

-சேவியர்

மேலும் செய்திகள்