உலகளாவிய தெற்கு பகுதிகளின் தலைவர் நீங்கள்: பிரதமர் மோடிக்கு பப்புவா நியூ கினியா பிரதமர் புகழாரம்

சர்வதேச அதிகார விளையாட்டில் சிக்கி, பாதிக்கப்பட்டவர்களாக நாங்கள் இருக்கிறோம் என பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபே கூறியுள்ளார்.;

Update:2023-05-22 14:27 IST

போர்ட் மோர்ஸ்பை,

பிரதமர் மோடி ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என அறிவிக்கப்பட்டது. இதன் முதல் பகுதியாக, கடந்த 19-ந்தேதி அவர் ஜப்பான் சென்றார்.

இதில், ஜி-7 மற்றும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இதன்பின்னர், பல்வேறு தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி விரிவாக பேசினார். ஜப்பான் நாட்டுக்கான 3 நாள் பயணம் நிறைவடைந்த பின்னர் பிரதமர் மோடி, பப்புவா நியூ கினியாவுக்கு நேற்று புறப்பட்டு சென்றார்.

அந்நாட்டின் விமான நிலையத்தில் நேற்றிரவு சென்று இறங்கியதும், அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் ஜேம்ஸ் மராபே அவரை நேரில் வரவேற்றார்.

அதன்பின் உயர்மட்ட தலைவர்கள், அதிகாரிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இதன்பின்னர், பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இசை கருவிகளும் இசைக்கப்பட்டன.

அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி, இசை நிகழ்ச்சி, நடனம் என உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்திய வம்சாவளியினரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை கூறினார்.

பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராபே உடன் இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் 3-வது உச்சி மாநாட்டில் இன்று கலந்து கொண்டார்.

இதில் பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபே கூறும்போது, சர்வதேச அதிகார விளையாட்டில் சிக்கி, பாதிக்கப்பட்டவர்களாக நாங்கள் இருக்கிறோம். நீங்கள் உலகளாவிய தெற்கு பகுதிகளின் தலைவராக இருக்கிறீர்கள்.

உலகளாவிய மன்றங்களில் உங்களது தலைமையின் பின்னால் நாங்கள் அணிவகுத்து வருவோம் என்று கூறியுள்ளார். ரஷியா மற்றும் உக்ரைன் மோதலால் அவரது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பணவீக்க நெருக்கடி பற்றி ஜேம்ஸ் சுட்டி காட்டி பேசினார்.

இதுபற்றி அவர் கூறும்போது, புவிசார்ந்த அரசியல் மற்றும் அதிகார போராட்டங்களுக்கான பெரிய நாடுகளின் விளையாட்டின் முடிவால், எரிபொருள் மற்றும் மின்சார கட்டணம் விலை உயர்ந்து நாங்கள் அதிகம் பாதிக்கப்படுகிறோம். பசிபிக் தீவு பகுதி நாடுகள், இந்த போரின் கடுமையை எதிர்கொள்ள வேண்டி உள்ளது என்று பிரதமர் ஜேம்ஸ் கூறியுள்ளார்.

இந்த பயணம் நிறைவடைந்த பின்னர் பப்புவா நியூ கினியாவில் இருந்து, பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள புறப்பட்டு சென்றுள்ளார். இந்த பயணம் வருகிற 24-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்