அரண்மனை மோதல் அம்பலத்துக்கு வந்தது "என்னை காலரை பிடித்து இழுத்து வில்லியம் கீழே தள்ளினார்"இளவரசர் ஹாரி குற்றச்சாட்டால் அதிர்வலைகள்

இளவரசர் ஹாரி, ‘ஸ்பேர்’ என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி உள்ளார்.

Update: 2023-01-05 21:15 GMT

லண்டன், ஜன.6-

இங்கிலாந்து அரண்மனையில் வில்லியம், ஹாரி இளவரசர் சகோதரர்கள் இடையேயான மோதல், அம்பலத்துக்கு வந்துள்ளது. வில்லியம் தன்னைக் காலரைப்பிடித்து இழுத்து அடித்து கீழே தள்ளியதாக இளவரசர் ஹாரி கூறி உள்ளார்.

ஹாரி-மேகன் திருமணத்தால் புயல்....

இங்கிலாந்து மன்னர் சார்லஸ், மறைந்த டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி (வயது 38), தன்னை விட 3 வயது மூத்த அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேயை காதலித்து 2018-ம் ஆண்டு மே 19-ந்தேதி விண்ட்சார் கோட்டையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் வைத்து மணந்தார்.

இவர்களது திருமணம், அரச குடும்பத்தில் ஒரு பெரும் புயலை ஏற்படுத்தியது.

ஒரு கட்டத்தில் மனம் நொந்து போன இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியர் அரச பதவிகளைத் துறந்து, தங்கள் குழந்தைகளான ஆர்ச்சீ மவுண்ட் பேட்டன், லில்லிபெட் மவுண்ட் பேட்டன் ஆகியோருடன் அரண்மனையை விட்டு வெளியேறினர். அவர்கள் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் குடியேறினர்.

சுயசரிதை

இந்த நிலையில் இளவரசர் ஹாரி, 'ஸ்பேர்' என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி உள்ளார்.

இந்தப் புத்தகம் 16 மொழிகளில் வரும் 10-ந்தேதி வெளியாக உள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளியே கசிந்து உலகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

காலரைப்பிடித்து இழுத்து தாக்கிய வில்லியம்...

இந்த புத்தகத்தில் இளவரசர் ஹாரி, தனக்கு அரச குடும்பத்தில் நேர்ந்த கதி குறித்து இதயம் திறந்து பேசி உள்ளார். அது வருமாறு:-

லண்டன் இல்லத்தில் வைத்து 2019-ம் ஆண்டு எங்கள் குடும்பத்தில் ஒரு மோதல் வந்தது. என் மனைவி மேகனை கடினமானவர், முரட்டுத்தனமானவர், கரடுமுரடானவர் என்றெல்லாம் வில்லியம் விமர்சித்தார்.

ஒரு கட்டத்தில் வில்லியம் எனது சட்டை காலரைப்பிடித்து, என் கழுத்துச்சங்கிலியை இழுத்து, தாக்கி தரையில் தள்ளினார். நான் நாய்க்கு சாப்பாடு வைக்கிற தட்டில் போய் விழுந்தேன். இதனால் எனது முதுகில் கீறல் ஏற்பட்டது. எங்களுக்கு இடையேயான உறவு மற்றும் போராட்டங்களின் சீரழிவு பற்றி அவர் ஊடகங்களுடன் பேச விரும்பினார்.

மேகனைப்பற்றி புகார்கள் கூறிய பின்னர், ஊடகங்களிடம் பேசுவதைப் பற்றி திரும்பத்திரும்ப கூறினார். ஆனால் அவரிடம் விவேகம் இல்லை. இது இருவரும் ஒருவரையொருவர் கூச்சல் போட வழிநடத்தியது. வில்லியம் வாரிசு மாதிரி நடந்து கொண்டார். என்னை அவர் புரிந்துகொள்ளவில்லை.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மனம் நொந்த மன்னர்

ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் மறைந்த பின்னர் 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ட்சார் கோட்டையில் வைத்து தனக்கும், தனது சகோதரர் வில்லியமுக்கும் இடையே நடந்த ஆவேச மோதல் பற்றியும் இளவரசர் ஹாரி நினைவுகூர்ந்துள்ளார்.

அந்த மோதலின்போது, "அப்பா (மன்னர் சார்லஸ்), எனது கடைசி காலத்தை துயரமாக்கி விடாதீர்கள்" என்று கேட்டுக்கொண்டார் என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்