துருக்கியில் 2-வது நாளாக தொடர்ந்து எரியும் காட்டுத்தீ
தீயை அணைக்கும் பணிகளில் தியணைப்பு வீரர்கள், போலீசார், தன்னார்வலர்கள் உள்பட சுமார் 1,500 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.
அங்காரா,
துருக்கி நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதிகளில் மிகப்பெரிய அளவிலான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் இந்த காட்டுத்தீ குறித்த தகவல் வெளியான நிலையில், தீ ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்த தீயை அணைக்கும் பணிகளில் தியணைப்பு வீரர்கள், போலீசார், தன்னார்வலர்கள் உள்பட சுமார் 1,500 பேர் ஈடுபட்டு வருகின்றனர். தீயணைப்பு பணிகளில் 360 வாகனங்கள், 20 ஹெலிகாப்டர்கள், 14 விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரவு, பகலாக தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இரவு நேரத்தில் ஓரளவு தீ கட்டுக்கள் வந்தாலும், பகலில் ஏற்படும் அதிக வெப்பம் மற்றும் வேகமான காற்று காரணமாக தீயை அணைக்கும் பணி மிகவும் சவால் நிறைந்ததாக உள்ளது என அந்நாட்டின் வனத்துறை மந்திரி வாஹித் கிரிஸ்சி தெரிவித்துள்ளார். மேலும், தீ பரவக்கூடிய பகுதிகளில் இதுவரை 51 வீடுகளில் இருந்து சுமார் 150 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.