ஹத்ராஸ் சம்பவம்: ரஷிய அதிபர் புதின் இரங்கல்
ஹத்ராஸ் மாவட்டத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார்.;
மாஸ்கோ,
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மீக சொற்பொழிவு நடத்தினார். இந்த மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் ஆவர். ஆன்மீக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்மீக நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இந்நிலையில், ஹத்ராஸ் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஹதராஸ் சம்பவம் தெடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார். அதில், உத்தரபிரதேசத்தில் நடந்த பயங்கர விபத்திற்கு ரஷியா சார்பில் ஆழ்ந்த இரங்கல் என குறிப்பிடப்பட்டுள்ளது.