ரன்வேயை தாண்டி சென்று கார் மீது மோதிய விமானம்.. வைரலாகும் வீடியோ
அவசரமாக தரையிறக்கும்போது, விமானம் கட்டுப்பாட்டை இழந்து வேலியை உடைத்துக்கொண்டு சென்றது.
டல்லாஸ்:
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், டல்லாஸ் அருகே சிறியரக விமானம் ஒன்று தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.
சம்பவத்தன்று மிட்லேண்டில் இருந்து வந்த அந்த விமானம், மெக்கினியில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்கப்பட்டது. அனுமதி கிடைத்ததும், குறிப்பிட்ட ரன்வேயில் விமானத்தை தரையிறக்க விமானி முயற்சித்தார். ரன்வேயை தொட்டதும் விமானத்தின் வேகத்தை குறைக்க விமானி முற்பட்டபோது விமானம் கட்டுப்பாட்டை இழந்து சீறிப்பாய்ந்தது.
ரன்வேயை தாண்டி வேலியை உடைத்துக்கொண்டு சென்ற விமானம், எதிரே உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காரில் பயணித்த நபர் பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விமானத்தில் இருந்த இருவரையும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சாலையோரம் நின்றுகொண்டிருந்த நபர், இந்த விபத்தை வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. விபத்து தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணையை தொடங்கி உள்ளது.