அமெரிக்கா: இந்திய இளம்பெண் சுட்டு கொலை; உறவினர் காயம் - வாலிபர் வெறிச்செயல்

அமெரிக்காவில் இந்திய இளம்பெண் சுட்டு கொல்லப்பட்டதற்கான பின்னணி பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-06-15 21:43 GMT

நியூஜெர்சி,

அமெரிக்காவில் இந்தியர்கள் பலர் தாக்கப்படுவது மற்றும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்படுவது சமீப காலங்களாக அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், மற்றொரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் கார்டரெட் பகுதியில் ரூஸ்வெல்ட் அவென்யூ என்ற இடத்தில் வசித்து வந்தவர் ஜஸ்வீர் கவுர் (வயது 29).

இவருடைய உறவுக்கார பெண் ககன்தீப் கவுர் (வயது 20). ஜஸ்வீருடன், கவுர் ஒன்றாக வசித்து வருகிறார். ஜஸ்வீரின் கணவர் லாரி ஓட்டுநராக உள்ளார். ஜஸ்வீர் கவுர், இந்தியாவில் உள்ள பஞ்சாபில், ஜலந்தர் மாவட்டத்திற்கு உட்பட்ட நூர் மஹால் பகுதியை சேர்ந்தவர். திருமணத்திற்கு பின்னர், அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், நியூஜெர்சியில் உள்ள ஜஸ்வீரின் வீட்டுக்குள் புகுந்து, ஜஸ்வீர் மற்றும் கவுர் ஆகிய இரு பெண்கள் மீதும், வாலிபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி விட்டு தப்பியுள்ளார். இதில், அவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர்.

உடனடியாக அவர்கள் விமானம் வழியே சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி ஜஸ்வீர் உயிரிழந்து விட்டார்.

இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்திய நபர், கவுரவ் சிங் கில் (வயது 19) என அடையாளம் காணப்பட்டார். இந்திய வம்சாவளியான இவர் பஞ்சாபில், நகோதர் நகரில் உசைனிவாலா கிராமத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் ஆவார். 6 மணிநேர தேடுதலுக்கு பின்னர், கில்லை போலீசார் கைது செய்தனர்.

இந்த தாக்குதலுக்கான பின்னணி பற்றியும், இவருக்கும் அந்த பெண்களுக்கும் இடையேயான தொடர்பு பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க செய்ய வேண்டும் என ஜஸ்வீரின் தந்தை கேவல் சிங் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்