அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே தீ விபத்தால் பரபரப்பு
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
வாஷிங்டன்,
அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அந்த நாட்டின் ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லம் மற்றும் பணியிடமாகும். இந்த வெள்ளை மாளிகைக்கு அருகிலேயே துணை ஜனாதிபதியின் அலுவலகம் மற்றும் பிற அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்த நிலையில் வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள ஐசன்ஹோவர் நிர்வாக அலுவலகத்தில் நேற்று முன்தினம் காலை திடீரென தீப்பிடித்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாக அலுவலகத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அங்கு மளமளவென பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. எனினும் இந்த சம்பவத்தால் வெள்ளை மாளிகை அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஏ.சி. எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறினர்.