கிழக்கு உக்ரைனில் முக்கிய நகரத்திலிருந்து பின்வாங்கிய உக்ரேனிய படைகள்; ரஷியாவுக்கு மிகப்பெரிய வெற்றி!

லூகன்ஸ் மாகாணத்தில் உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரமான லிசிசண்ஸ்க் நகரத்தை கைப்பற்றிவிட்டதாக ரஷியா அறிவித்தது.

Update: 2022-07-04 08:22 GMT

மாஸ்கோ,

உக்ரைன் மீது ரஷியா 131-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதனால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைனின் லூகன்ஸ் மாகாணம் முழுவதையும் கைப்பற்றிவிட்டதாக ரஷியா இன்று அறிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்ள லூகன்ஸ் மாகாணத்தில் உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரமான லிசிசண்ஸ்க் நகரத்தை கைப்பற்றிவிட்டதாக ரஷியா நேற்று அறிவித்தது. இதன் மூலம் லூகன்ஸ் மாகாணம் முழுவதையும் கைப்பற்றி விட்டதாக ரஷியா அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியா, தொடக்கத்தில் தலைநகர் கீவை மட்டுமே குறி வைத்தது. ஆனால் அதில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்காததால் கிழக்கு உக்ரைன் பக்கம் கவனத்தை திருப்பியது.

டான்பாஸ் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களை கைப்பற்றினால் கிரீமியாவுடன் இணைத்து கிழக்கு உக்ரைனை முழுமையாக கைப்பற்றி விடலாம் எனக் கணக்குப் போட்டது.அதன்படி அந்த பகுதியில் முழு வீச்சில் தாக்குதலைத் தொடங்கியது. அதன் பலன், மரியுபோல் நகரம் வீழ்ந்தது.

அதனைத் தொடர்ந்து செவோரோடொனட்ஸ்க், லிசிசான்ஸ்க் என தொடர் வெற்றிகளைப் பெற்று, தற்போது லுஹான்ஸ்க் மண்டலத்தை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது ரஷியா. லிசிசான்ஸ்க் நகரில் இருந்த உக்ரேனிய படைகள் பின்வாங்கி விட்டதால், கிழக்கு உக்ரைன் ரஷியா வசமாகி விட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்