டுவிட்டர் ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டார் அதன் நிறுவனர் ஜாக் டோர்சி!

டுவிட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி இன்று ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

Update: 2022-11-05 16:35 GMT

வாஷிங்டன்,

உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளமான டுவிட்டரை உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் வாங்கினார். இதனை தொடர்ந்து டுவிட்டர் நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் இருந்த நிர்வாகிகளை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கினார்.

மேலும், உலகம் முழுவதும் பணியாற்றும் டுவிட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் பலரை நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி, உலகம் முழுவதும் டுவிட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் சுமார் 7 ஆயிரத்து 500 பேரில் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களை நேற்று ஒரேநாளில் பணிநீக்கம் செய்தது.

இது தொடர்பாக மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், டுவிட்டரில் ஊழியர்கள் குறைப்பு தொடர்பாக, துரதிஷ்டவசமாக நிறுவனம் ஒருநாளைக்கு ரூ.32 கோடியை இழக்கும்போது வேறு வழியில்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில், டுவிட்டரில் பணி நீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கை குறித்து டுவிட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி இன்று அந்நிறுவன ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

டுவிட்டர் நிறுவனம் தன்னால் மிகப்பெரிய ஒன்றாக வளர்ந்ததை அவர் சுட்டிக்காட்டினார். அதன் காரணமாக பல பணியாளர்களை டுவிட்டர் வேலையில் அமர்த்தியது. இந்த நிலையில், இப்போது எலான் மஸ்கின் அதிரடி நடவடிக்கையால் அவர்கள் வேலை பறிபோகும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

இதனை சுட்டிக்காட்டி அவர் மன்னிப்பு கோரினார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- "டுவிட்டரில் முன்பு பணியாற்றியவர்கள் மற்றும் இப்போதும் பணியாற்றுபவர்கள், வலிமையான மற்றும் நெகிழ்ச்சியானவர்கள். எவ்வளவு கடினமான தருணத்திலும் அவர்கள் எப்போதும் ஒரு வழியைக் கண்டுபிடிப்பார்கள்.

பலர் என் மீது கோபமாக இருப்பதை நான் உணர்கிறேன். எல்லோரும் ஏன் இந்த நிலைக்கு ஆளாகினார்கள் என்பதற்கு நான் பொறுப்பு: நான் நிறுவனத்தின் அளவை மிக விரைவாக வளர்த்தேன். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டுவிட்டரின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஜாக் டோர்சி 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த ஆண்டு மே மாதம் அந்நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்தும் விலகினார். இதனை தொடர்ந்து டோர்சி, டுவிட்டரில் நிலவும் சில விஷயங்கள் குறித்து வருத்தம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்