துருக்கியில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்கள் - போலந்து ராணுவத்திடம் ஒப்படைப்பு

துருக்கியில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களைப் பெற்ற முதல் ஐரோப்பிய ஒன்றிய மற்றும் நேட்டோ நாடு என்ற பெயரை போலந்து பெற்றுள்ளது.

Update: 2022-10-29 18:14 GMT

வார்சா,

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலை தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ நாடுகள் தங்கள் பாதுகாப்பு தளவாடங்களை பலப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் துருக்கியில் இருந்து பைரக்டார் டி.பி.2 எனப்படும் ஆளில்லா விமானங்களை(டிரான்கள்) வாங்கி, அதை போலந்து ராணுவத்துடன் இணைப்பதற்காக கடந்த மே 2021-ல் ஒப்பந்தம் போடப்பட்டது.

மொத்தம் 24 ஆளில்லா விமானங்களையும், அவற்றுக்கான தரைக்கட்டுப்பாட்டு யூனிட்டுகளையும் 4 தவணைகளில் வழங்குவது என ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்படி முதல் தவணையாக 6 பைரக்டார் டிரோன்கள் போலந்து ராணுவத்திடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து போலந்து பாதுகாப்பு மாரியஸ் பிளாசாக் கூறுகையில், "இந்த ஆளில்லா விமானங்களை வாங்கியது குறித்து அரசின் மீது எதிர்கட்சிகள் விமர்சனம் செய்தனர். ஆனால் உக்ரைனில் தற்போது நடப்பதை பார்க்கும் போது, நாம் நமது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியது அவசியம் என்பது தெளிவாகிறது. போலந்தின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்தையும் நாம் செய்வோம்" என்று தெரிவித்தார்.

இந்த ஆளில்லா விமானங்கள் விரைவில் உக்ரைன் ராணுவத்தில் இணைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்ட வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் துருக்கியில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களைப் பெற்ற முதல் ஐரோப்பிய ஒன்றிய மற்றும் நேட்டோ நாடு என்ற பெயரை போலந்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்